கன்னட திரையுலகில் போதைப்பொருள் அதிகளவில் புழக்கத்தில் உள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய குற்றப்பிரிவு அலுவலர்கள் (சிசிபி) விசாரணை நடத்திவருகின்றனர்.
இது குறித்து ஏற்கனவே கன்னட திரைப்பட நடிகைகள் ராகினி திவேதி, நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக வைபவ் ஜெயின் என்பவரைக் காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். இது தொடர்பாக பெங்களூரு காவல் துறை இணை ஆணையர் சந்தீப் பட்டேல் கூறுகையில், "காட்டன்பேட்டை காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட போதைப்பொருள் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட வைபவ் ஜெயின் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்” என்றார்.
போதைப்பொருள் விவகாரம் கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் முக்கியப் புள்ளிகளுக்கும் தொடர்பிருக்காலம் என்றும் அவர்களை காப்பாற்றும் வகையில் வழக்கின் விசாரணையில் அரசு தலையிடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
ஆனால், இதை முற்றிலுமாக மறுத்துள்ள கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த காவல் துறைக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இது தொடர்பான விசாரணை மிகவும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகிறதாகவும் இதில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதைப் பொறுத்துதான் பார்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
திரைப்படத் தயாரிப்பாளரும் பத்திரிகையாளருமான இந்திரஜித் லங்கேஷ், கன்னடத் திரையுலகில் இருக்கும் போதைப்பொருள் புழக்கம் குறித்த தனது வாக்குமூலத்தை ஏற்கனவே மத்திய குற்றப்பிரிவினருக்கு அளித்துள்ளார். கன்னடத் திரையுலகில் குறைந்தது 15 பேர் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'நடிகர் வடிவேல் பாலாஜி மரணம் தனக்கு அதிர்ச்சியாக இருந்தது' - ரோபோ சங்கர் உருக்கம்...!