பிரபல பாடலாசிரியர் கபிலனின் மகளும், எழுத்தாளருமான தூரிகை தொடங்கிய பெண்களுக்கான 'Being Women' என்ற பிரத்யேக டிஜிட்டல் பத்திரிகையை இயக்குநர்கள் சேரன், பா. ரஞ்சித், நடிகை விமலா ராமன் ஆகியோர் வெளியிட்டனர்.
இது குறித்து எழுத்தாளர் தூரிகை பேசுகையில், “இது பெண்ணியம் பற்றி பேசுவதற்காகத் தொடங்கப்பட்டது அல்ல; பெண்களுக்கு எதிராக நடக்கும் எதிர்மறைப் பக்கங்களை பெறுவதற்காகவும் அல்ல; பெண்கள் குறித்த அவர்களுடைய நேர்மறையான பக்கங்களை வெளிப்படுத்தவும் பெண்களைக் கொண்டாடவும் இந்தப் பத்திரிகையை தொடங்கினேன்” என்றார்.
நடிகை விமலா ராமன் பேசுகையில், “இந்த ‘பியீங் விமன்’ பத்திரிகையில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். அட்டைப்பட புகைப்பட படப்பிடிப்பில் நான் ஒரு பேராசிரியராக உணர்ந்தேன். இதற்குமுன் இப்படி உணர்ந்ததில்லை.
தூரிகையின் ‘பியீங் விமன்’ பத்திரிகை ஒவ்வொரு பெண்ணையும் கொண்டாடும் வகையில் அமையப் போகிறது. ஒவ்வொரு பெண்ணுக்கும் பெரிய ஊக்கமளிக்கக்கூடிய பல விஷயங்களை வழங்கவிருக்கிறது. அவற்றை ஒவ்வொருவரும் கண்டு கொண்டாடலாம்” எனத் தெரிவித்தார்.
இயக்குநர் பா. ரஞ்சித் இது குறித்து பேசுகையில், “பெண்களுக்காகப் பெண்களைப் பற்றிய நேர்மறை சக்தியை உருவாக்குவதற்கும், பெண்களுடைய சாதனைகளை அனைவருக்கும் கொண்டுசேர்க்கும் நோக்கத்தோடும் இந்த டிஜிட்டல் பத்திரிகை தொடங்கப்பட்டிருப்பதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
பெண்களுக்காக இவர்கள் செய்யவிருப்பதைப் பார்க்கும்போது மிகவும் ஆர்வமாக இருக்கிறது. நிச்சயம் சாதனைப்படைக்கும் ஒவ்வொரு பெண்ணையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவர வேண்டும். அனைத்துப் பெண்களையும், அவர்களின் திறமைகளையும் காட்சிப்படுத்த வேண்டும்” எனக் கூறினார்.
இயக்குநர் சேரன் பேசுகையில், “இன்று வெளியாகும் 'பீயிங் விமன்' டிஜிட்டல் பத்திரிகையை, கபிலனின் மகளாகப் பிறந்து தூரிகை என்று அழகாகப் பெயர் சூட்டப்பட்டு, இன்று பெயருக்கேற்றார்போல் பெண்களின் பல வகையான சிறப்புகளை 'பீயிங் விமன்' என்று ஆங்கில டிஜிட்டல் பத்திரிகை மூலம் கொண்டாடவுள்ளார். இந்தப் பத்திரிகையை வாங்க வேண்டிய அவசியமில்லை; வாசிப்பது மிகவும் எளிது. நீங்கள் எங்கு இருந்தாலும் உங்கள் கைகளிலிருக்கும் கைபேசி மூலமாகவே வாசிக்க முடியும்.
இந்தப் பத்திரிகை பெண்களுக்கானது. குறிப்பாக, பெண்களின் சிறப்பம்சங்கள், சாதனைகள், அறிவாற்றல், பெண்கள் எந்தெந்தத் துறையில் பிரபலமாக இருக்கிறார்கள்? அவர்கள் அந்த இடத்தை எப்படி அடைந்தார்கள் என்பதை ஒரு பெண்ணாக இருந்து, தூரிகை கபிலன் நடத்துகிறார்.
இவர் கவிஞர் கபிலனின் மகள். கவிஞர் வைத்த இந்தப் பெயரைக் கேட்கும்போதே அழகாகவும், இதுபோன்ற பெயரை வைக்க வேண்டும் என்று ஆசையாகவும் உள்ளது. தூரிகை என்று சொல்லும்போது நிறைய ஓவியங்களைத் தீட்டக்கூடிய வல்லமை வாய்ந்தது. அதேபோல் இந்தத் தூரிகையும் பத்திரிகை மூலமாக நிறைய ஓவியங்களை உருவாக்க வேண்டுமென்பது எனது ஆசையும், வாழ்த்துகளும்” எனக் கூறினார்.