தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

‘சூரரைப் போற்று’ இந்தி ரீமேக் விவகாரம்: சூர்யா தரப்புக்கு சாதகமாக தீர்ப்பு!

'சூரரைப் போற்று' படத்தை இந்தியில் ரீமேக் செய்ய‌ நடிகர் சூர்யாவின் சொந்தப் பட நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சூரரைப் போற்று
சூரரைப் போற்று

By

Published : Sep 8, 2021, 7:46 PM IST

சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் 'சூரரைப் போற்று'. இந்தப் படத்தை சூர்யாவின் சொந்தப் பட நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனமும், அபூன்டான்டியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனமும் இணைந்து இந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டு, கடந்த ஜூலை மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

இந்தி ரீமேக்குக்கு தடை

ஆனால் 2டி என்டர்டெய்ன்மென்ட், அபுன்டான்டியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து 'சூரரைப் போற்று' படத்தின் இந்தி ரீமேக்கினை தயாரிக்கக் கூடாது எனவும், இந்தி ரீமேக் படத்தின் பணிகளுக்கு உடனடியாக தடை விதிக்குமாறும், இந்தப் படத்தின் இணை தயாரிப்பு நிறுவனமான சீக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தது.

சூரரைப் போற்று, 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் குழுவினர்

இந்த வழக்கு நேற்று (செப்.07) விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதியரசர், 2டி என்டர்டெய்ன்மென்ட் தாக்கல் செய்த ஆதாரங்களை ஏற்றுக் கொண்டு, இந்த வழக்கில் உள்ள தடையை நீக்கி உத்தரவிட்டார்.

முன்னதாக கேப்டன் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பாக அவர் எழுதிய ‘சிம்ஃப்ளி ஃப்ளை’ என்ற நூலுக்கான காப்புரிமைத் தொகை, அவரது சம்மதம், அதற்கான திரைப்பட உரிமைத் தொகை உள்ளிட்ட அனைத்துக் கட்டணத்தையும் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் முழுமையாக கேப்டன் கோபிநாத்திடம் நேரடியாக செலுத்தி இருக்கிறது.

அத்துடன் இவ்விவகாரம் தொடர்பாக ஒப்புதல் மற்றும் உதவி செய்ததற்காக சீக்யா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்துக்கு பெரும் தொகையை (காப்புரிமை உரிமம் பெறுவதற்கான இடைத்தரகு தொகை) முழுமையாக வழங்கியிருக்கும் ஆதாரங்களையும் அந்நிறுவனம் தாக்கல் செய்தது. இதன் மூலம் 2டி என்டர்டெய்ன்மென்ட், அபுன்டான்டியா என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இந்தி பதிப்பிற்கான பணிகளை தொடர்வதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது.

உறுதிப்படுத்தப்பட்ட நீதி

'சூரரைப் போற்று' படத்தை தமிழில் இயக்கிய இயக்குநர் சுதா கொங்கரா, ஹிந்தியிலும் இயக்குகிறார். விரைவில் இதற்கான பணிகள் முழுவீச்சில் தொடங்க உள்ளன.

இந்நிலையில், இதுதொடர்பாக பேசிய 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், “இந்தத் தீர்ப்பின் மூலம் நீதி மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் நீதித்துறையின் மீது நேர்மறையான எண்ணம் மேலோங்கி இருக்கிறது.

'சூரரைப் போற்று' படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். இப்படத்தின் இந்தி பதிப்பிற்கான பணிகள் விரைவில் முழுவீச்சில் நடைபெறும்” என்றார்.

விருதுகளைக் குவிக்கும் சூரரைப் போற்று

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ‘சூரரை போற்று’ திரைப்படம், 78ஆவது கோல்டன் குளோப் விருதுகளுக்கான சிறந்த வெளிநாட்டு திரைப்பட பிரிவின்கீழ் திரையிடப்படுவதற்காக தேர்வு செய்யப்பட்ட பத்து இந்திய படங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தியாவில் அமேசான் பிரைம் டிஜிட்டல் தளத்தில் அதிகளவு பார்வையாளர்களால் பார்வையிடப்பட்ட பிராந்திய மொழி படமாகவும் ‘சூரரைப்போற்று’ அமைந்தது.

தற்போது ஐஎம்டிபி எனப்படும் சர்வதேச திரைப்படங்களை வரிசைப்படுத்தும் இணையதள பட்டியலில் அதிக மதிப்பீடு செய்யப்பட்ட மூன்றாவது படமாக, ( 9.1 என்ற மதிப்பீட்டை ) ‘சூரரைப் போற்று ’ இடம்பெற்றிருக்கிறது. இந்தப் பட்டியலில் ‘ஷாவ்ஷாங் ரிடெம்ஷன்’ மற்றும் ‘த காட்பாதர்’ ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் ‘சூரரைப்போற்று’ இடம் பிடித்திருக்கிறது.

மேலும், முன்னதாக மெல்பேர்ன் நகரில் நடைபெற்ற 12ஆவது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் சிறந்த படமாக ‘சூரரைப்போற்று’ படமும், சிறந்த நடிகராக சூர்யாவும் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'கட்டில்' திரைப்பட இயக்குநரை வாழ்த்திய ஆளுநர்!

ABOUT THE AUTHOR

...view details