பிரிட்டிஷ் அகாதமி ஆஃப் ஃபில்ம் அண்ட் டெலிவிஷன் ஆர்ட்ஸ் எனப்படும் பிரபல பாஃப்டா (BAFTA) விருதுகள் வழங்கும் விழா விரைவில் தொடங்கவுள்ள நிலையில், விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்ட படங்கள், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டு ஹாலிவுட் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியல் நிற பேதங்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், ஆங்கில நடிகர்கள் தவிர்த்து, ஆஃப்ரிக்க, கருநிற நடிகர்கள் எவரும் நடிப்புத் திறமைக்கான பிரிவில் பரிந்துரைக்கப்படாதது கேள்விகளையும், இணையதள பயன்பாட்டாளர்களிடையே சீற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்ற வருடம் வெளியாகி சிறந்த விமர்சனங்களைப் பெற்ற ’ஜோக்கர்’ திரைப்படம், மார்டின் ஸ்கார்சசியின் ’ஐரிஷ்மேன்’ உள்ளிட்ட திரைப்படங்கள் இடம்பெற்றுள்ள இந்த பட்டியல் சினிமா விமர்சகர்களை திருப்திக்குள்ளாக்கியுள்ள போதிலும், பொதுவாக 20 நடிகர்களைக் கொண்டிருக்கும் இப்பட்டியல் ஒருதலைபட்சமாக வெள்ளை நிற ஆங்கில நடிகர்களையே உள்ளடக்கியுள்ளதாக குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் மார்காட் ராபி, ஸ்கார்லெட் ஜோஹன்சன் ஆகிய நடிகைகள் இருவேறு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதும் ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.