ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவான ‘காஞ்சனா’ வெளியாகி பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ட்ரெண்ட் செட்டர் முனி:
2007ஆம் ஆண்டு ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான படம் ‘முனி’. இதில் ராகவா லாரன்ஸ் உடன் வேதிகா, ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படம் குழந்தைகள் முதல் அனைவரையும் கவர்ந்து வெற்றி பெற்றது.
தமிழ் சினிமா ரசிகர்களிடம் ஹாரர் காமெடி திரைப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்க ‘முனி’ ஒரு முக்கியமான காரணம் எனலாம். இதன் இரண்டாம் பாகமாக 2011ஆம் ஆண்டு வெளியான படம் ‘காஞ்சனா’.
காஞ்சனாவின் பயணம்:
மிரட்டலான ட்ரெய்லர், சூப்பர் ஹிட் பாடல்கள் என படம் இறங்கும்போதே வெற்றி பெற்றுவிடும் என பலரையும் நினைக்க வைத்தது; அதேபோல் வெற்றியும் பெற்றது. கமர்ஷியல் படம் என்றாலும், சமூகத்தில் ஒடுக்கப்படும் திருநங்கை சமுதாயத்தின் வலிகளை கொஞ்சமேனும் பதிவு செய்திருந்தது.
‘காஞ்சனா’ என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் சரத்குமார் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ‘காஞ்சனா’ படத்துக்கு முன்புவரை திருநங்கைகளை கண்ணியமாக காட்டிய தமிழ் சினிமாவை விரல் விட்டு எண்ணிவிடலாம். பாலியல் தொழிலாளி, ஏமாற்றி பிழைப்பவர்களாகவே பெரும்பாலும் காட்டிவந்தனர். அந்த வகையில் ‘காஞ்சனா’ தமிழ் சினிமாவின் முக்கியமான திரைப்படமாகும்.
லாரன்ஸ் இயக்குநராகவும் நடிகராகவும் படத்துக்கு உண்மை செய்திருப்பார். தெரிஞ்சுருச்சா உங்க எல்லாருக்கும் தெரிஞ்சுருச்சா, சரிவிடு என அவர் நலினத்தோடு நடித்த காட்சியை மறக்க முடியாது.
'காஞ்சனா’ பற்றி பேசும்போது இசையமைப்பாளர் தமனை தவிர்த்து விட்டு பேச முடியாது. அவரது இசை படத்துக்கு பெரும் பக்கபலமாக இருந்தது. சங்கிலி புங்கிலி, கருப்பு பேரழகா, கொடியவனின் கதைய முடிக்க ஆகிய பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. ரசிகர்கள் கணித்தது போலவே பெரும் வெற்றி பெற்ற இத்திரைப்படம் கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
2012ஆம் ஆண்டு கன்னடத்தில் ‘கல்பனா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்ட இப்படத்தில் உபேந்திரா நடித்திருந்தார். ராம நாராயணன் இப்படத்தை இயக்கியிருந்தார். சரத்குமார் கதாபாத்திரத்தில் நடித்திருந்த சாய் குமார் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.
பின்னர் 7 ஆண்டுகள் கழித்து இப்படம் ‘லக்ஷ்மி’ என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. அக்ஷய் குமார், கியாரா அத்வானி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, ராகவா லாரன்ஸுக்கே படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், தயாரிப்பாளர் தரப்போடு ஏற்பட்ட முரண்பாடு காரணமாக லாரன்ஸ் படத்தை விட்டு விலகினார். பின்னர் தயாரிப்பு நிறுவனம் லாரன்ஸிடம் சமாதானம் பேசி படத்தை இயக்க வைத்தது. ‘காஞ்சனா’ படத்தின் பாதை இத்தனை பெரியது. அந்தப் படம் பத்து ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதை அதன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: சார்பட்டா பரம்பரை: முகமது அலிக்கு ஒரு காதல் கடிதம்