சுகுமார் இயக்கத்தில் உருவாகும் 'புஷ்பா' படத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன், ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 'ரங்கஸ்தலம்' படத்துக்குப் பிறகு சுகுமார் இயக்கும் படம் என்பதால் இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
'புஷ்பா' படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனாவும், வில்லனாக ஃபகத் பாசிலும் நடிக்கின்றனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தில் அல்லு அர்ஜூன் கதாபாத்திரமான 'புஷ்பா ராஜ் அறிமுகம்' டீசர், இதுவரை இணையத்தில் அதிகம் பேர் பார்த்த டீசர் என்னும் சாதனையை படைத்துள்ளது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஆகஸ்ட் 13ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகிறது. தமிழில் பென்னி தயாள் பாடுகிறார். இந்தியில் விஷால் டாடாலனி, கன்னடத்தில் விஜய் பிரகாஷ், மலையாளத்தில் ராகுல் நம்பியார், தெலுங்கில் சிவம் ஆகியோர் பாடுகின்றனர்.
தேவி ஸ்ரீபிரசாத்தின் பிறந்தநாளான இன்று (ஆகஸ்ட்.02) படக்குழுவினர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இப்படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், எஞ்சியுள்ள படப்பிடிப்பை முடிக்க படக்குழு மும்முரமாக இயங்கிவருகிறது.
இந்த ஆண்டு, ஆகஸ்ட் 13ஆம் தேதி படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருந்த நிலையில், கரோனா பரவலால் வெளியீடு தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மேலும் 'புஷ்பா' படத்தை இரண்டு பாகங்களாக வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அல்லு அர்ஜுனின் 'புஷ்பா' படைத்த புதிய சாதனை!