இயற்கை இரக்கமற்றது
‘ஒவ்வொரு வினைக்கும் அதற்கு இணையான எதிர்வினை உண்டு’ எனும் நியூட்டனின் மூன்றாம் விதிப்படி, இயற்கைக்கு நாம் செய்ததை, இயற்கை நமக்கு திருப்பிச் செய்துகொண்டிருக்கிறது. இயற்கை வளத்தை சுரண்டும் கார்ப்பரேட்களை எதிர்க்காது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய அக்கறையற்று அலைந்ததன் விளைவாக நாம் பேரழிவைச் சந்தித்து வருகிறோம்.
பாலைவன வெட்டுக்கிளிகள் இந்தியாவின் 5 மாநிலங்களில் நுழைந்து விவசாய நிலங்களில் உள்ள விளைபொருட்களை நாசம் செய்துள்ள வேளையில், இந்தப் பிரச்னை குறித்து திரையுலக மேதை ஹிட்ச்காக் இயக்கத்தில் வெளியான ‘தி பேர்ட்ஸ்’ முன்பே பேசியிருப்பதை பற்றியும், பாலைவன வெட்டுக்கிளிகள் தாக்கம் எத்தகையது என்பதைப் பற்றியும் காண்போம்.
‘தி பேர்ட்ஸ்’ - டேப்னி டு மவுரியர் - ஆல்ப்ரெட் ஹிட்ச்காக்
1963ஆம் ஆண்டு ஹிட்ச்காக் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘தி பேர்ட்ஸ்’. டேப்னி டு மவுரியர் எனும் ஆங்கில எழுத்தாளர் எழுதிய ‘தி பேர்ட்ஸ்’ எனும் சிறுகதைதான் இத்திரைப்பட உருவாக்கத்துக்கு உந்துதலாக அமைந்தது.
பறவைகள் நிறைந்த வளைகுடா பகுதியை மக்கள் ஆக்கிரமிக்கத் தொடங்குவதன் விளைவாக பறவைகளின் கோபத்துக்கு மக்கள் ஆளாகின்றனர். தங்கள் இடத்தை ஆக்கிரமித்த மனிதர்களை பறவைகள் பழிவாங்குவது போல இதன் கதையமைப்பு இருக்கும். இந்தப் படத்தில் வருவது போன்ற சம்பவங்கள் அதன்பிறகு உண்மையிலேயே இங்கிலாந்து பகுதிகளில் நடந்ததுதான் கொடுமை. காகம் உள்ளிட்ட பல பறவைகள் இங்கிலாந்து பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அச்சுறுத்தலாக மாறின.
தி பேர்ட்ஸ் படத்தின் காட்சி பயிர்களை நாசம் செய்வது மட்டுமில்லாமல், விவசாயிகள் வளர்க்கும் ஆடுகளை மூர்க்கமாக தாக்கும் சம்பவங்களும் நடந்தேறியது. இங்கிலாந்தின் ஹாம்ப்ஷைர் உள்ளிட்ட சில பகுதிகளில் காக்கைகளால் ஆடுகள் ஒற்றைக் கண்ணுடன் அலையும் நிலை ஏற்பட்டது. காக்கைகள் கூட்டமாக ஆடுகளை தாக்கி, அதன் கண்களை கவ்விச் சென்றன. இதன் காரணமாக 16 வகையான பறவைகளை சுட்டுத்தள்ள இங்கிலாந்து அரசாங்கமே அனுமதி கொடுத்தது. ஆனால் பறவைகள் இதுபோல நடந்துகொள்ள காலநிலை மாற்றமும், சுற்றுச்சூழல் பாதுகாப்பின்மையுமே காரணம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
காலநிலை மாற்றத்திலும், சுற்றுச்சூழல் அழிவிலும் மனிதகுலம் பெரும்பான்மையான பங்கு வகிக்கிறது. அதன்காரணமாகவே இதுபோன்ற நம்ப முடியாத சம்பவங்கள் நிகழ்கின்றன. இப்படியான ஒரு சூழலைதான் தற்போது பாலைவன வெட்டுக்கிளிகளால் இந்தியா சந்தித்துவருகிறது.
லோக்கஸ்ட் அட்டாக்
லோக்கஸ்ட் எனும் பாலைவன வெட்டுக்கிளிகள் இந்தியாவின் ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாய விளைபொருட்களை நாசம் செய்துவருகிறது. 1993-க்கு பிறகு இப்போதுதான் இந்த வெட்டுக்கிளிகள் தாக்குதலை இந்தியா சந்திக்கிறது. ஆனால், இந்தமுறை எப்போதும் இல்லாத அளவு மிகக் கொடூரமான தாக்குதல். ஆப்பிரிக்க பாலைவனப் பகுதியிலும், அரேபிய தீபகற்பப் பகுதியிலும் மட்டுமே பெருவாரியாக காணப்பட்ட இந்த வெட்டுக்கிளிகள், கூட்டம் கூட்டமாக இடம்பெயரத் தொடங்கியுள்ளன. இதற்கு காரணம் காலநிலை மாற்றம் என துறை சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உலக வெப்பமயமாதல் காரணமாக ஆப்பிரிக்க பாலைவனம் மற்றும் அரேபிய தீபகற்பப் பகுதிகள் கடந்த 2019ஆம் ஆண்டு கடுமையான மழைப் பொழிவை சந்தித்தது. ஈர மண்ணும், பசுமையான சூழலும் பாலைவன வெட்டுக்கிளிகளின் இனப்பெருக்கத்துக்கு ஏதுவாக இருக்கும். எப்போதும் பருவமழை தொடங்கும்போது பாகிஸ்தான் வழியாக இந்தியா வரும் வெட்டுக்கிளிகள், இந்த முறை முன்பே வந்துவிட்டன, அதுவும் கோடிக்கணக்கில். காலநிலை மாற்றம் இந்த வெட்டுக்கிளிகளின் செயல்பாடுகளையும் மாற்றியிருக்கிறது. வழக்கத்துக்கு மாறாக இவை அதிக உயரம் பறக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்த வெட்டுக்கிளி தன்னுடைய எடை அளவுக்கு உணவை எடுத்துக் கொள்கிறது. ஒரு வெட்டுக்கிளி 2 கிராம் எடை கொண்டது. ஒரு சதுர கிலோமீட்டர் நிலத்தில் 4 கோடி வெட்டுக்கிளிகளை அடக்க முடியும். இந்த வெட்டுக்கிளிகளின் அட்டகாசத்தை கண்ட விவசாயிகள் மிரண்டுபோயிருக்கிறார்கள்.
பாலைவன வெட்டுக்கிளிகள் கூட்டம் மாதக்கணக்கில் பட்டினி கிடந்ததைப் போல் இந்த வெட்டுக்கிளிகள் தின்னுகின்றன என ஒரு விவசாயி தெரிவிக்கிறார். 35,000 நபர்கள் ஒரு நாளில் உண்ணும் உணவை, ஒரு சதுர கிமீ நிலத்தில் பரவியிருக்கும் வெட்டுக்கிளிகளால் உண்ண முடியும் என ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது. அரசாங்கம் இதில் விரைந்து நடவடிக்கை எடுக்காததும், அலட்சியப் போக்கும் வருத்தமளிப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
கார்ப்பரேட் எதிர்ப்பு - டிகாப்ரியோ
2016ஆம் ஆண்டு வெளியான ‘தி ரெவனன்ட்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்ற டிகாப்ரியோ, ‘தி ரெவனன்ட்’ திரைப்படம் மனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்பைப் பற்றி பேசுகிறது. காலநிலை மாற்றம் நம் கண்முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இனி இயற்கை வளத்தை சுரண்டும் கார்ப்பரேட்டுகளுக்கு நாம் ஆதரவு தெரிவிக்கக்கூடாது. மனிதத்தை பேசுபவர்களையும், பூர்வகுடிகளையும் நாம் ஆதரிக்க வேண்டும் என பேசியதோடு, அதன்படி செயல்பட்டும் வருகிறார்.
இயற்கை பேரழிவில் இருந்து மனிதகுலம் தப்பிக்க வேண்டுமானால், இயற்கையை பாதுகாப்பதை நம் கடமையாகக்கொள்ள வேண்டும். இயற்கை வளத்தைச் சுரண்டி பணம் பார்க்கும் கார்ப்பரேட் முதலைகளுக்கு எதிராக அணி திரள வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அனைவரையும் சென்றடைய வேண்டும்...
இதையும் படிங்க:ஆஸ்கரே தேடிச்சென்று பெருமைகொண்ட நாயகன் லியனார்டோ டிகாப்ரியோவின் சாதனைப் பயணம்!