பாலிவுட் 'பிக் பி' என்றழைக்கப்படும் அமிதாப் பச்சன் நடிப்பில் 2016ஆம் ஆண்டு வெளியான படம் 'பிங்க்'. இத்திரைப்படத்தில் நடிகை டாப்ஸி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை மையக்கருத்தாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதையடுத்து இத்திரைப்படம் தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டது. இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். 'நேர்கொண்ட பார்வை' என்ற தலைப்பில் உருவான இத்திரைப்படத்தில் நடிகர் அஜித் கதாநாயகனாக நடித்துள்ளார். 'தீரன்' பட இயக்குநர் வினோத் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.