போனி கபூர் தயாரிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் 'வலிமை'. இந்தப் படத்தில் அஜித்துடன் நஸ்ரியா, ஹூமா குரேஷி, யோகி பாபு, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
'வலிமை' படத்தின் படப்பிடிப்பு, பூஜையைத் தவிர வேறு எந்த அப்டேட்டும் நீண்ட நாள்களாகியும் வராத காரணத்தால், அஜித் ரசிகர்கள் செல்லும் இடமெல்லாம் யாரைப் பார்த்தாலும் 'வலிமை' அப்டேட் கேட்டு வந்தனர்.
டிக்-டாக் பிரபலம் ஜி.பி. முத்து, தேர்தல் பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி, சென்னை டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலி, சென்னை வந்த பிரதமர் மோடி, தேர்தல் பரப்புரை மேற்கொண்ட வானதி சீனிவாசன் என, பல தரப்பினரிடம் அஜித் ரசிகர்கள் 'வலிமை அப்பேட்' கேட்ட நிகழ்வு தொடர்பான காணொலிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
தொடர்ந்து மதுரை அஜித் ரசிகர்கள் 'வலிமை' அப்டேட் கேட்டு போஸ்டரையும் ஒட்டினர். ஒரு கட்டத்தில், கடவுள் முருகனிடமே 'வலிமை' பட அப்டேட் கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சியளித்தனர்.
ரசிகர்களின் இச்செயலால் கடுப்பான அஜித் அறிக்கை விடும் அளவிற்கு, இப்பிரச்னை பூதாகரமானது.