நரமாமிசம் உண்ணும் குழுவை மையமாக வைத்து காமெடி, அட்வெஞ்சர், திரில்லர் பாணியில், தமிழில் முதல் முறையாக உருவாகியுள்ள படம் 'ட்ரிப்'. பிப்ரவரி 5ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாகிறது. டென்னிஸ் மஞ்சுநாத் எழுதி இயக்கிய இப்படத்தில் சுனைனா, யோகிபாபு, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை சாய் ஃபிலிம்ஸ் ஸ்டூடியோ சார்பில் விஸ்வநாதன், பிரவீன் குமார் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்த படத்தின் ட்ரெய்லரை படக்குழுவினர் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளியிட்டனர். பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் கூறுகையில், ”இயக்குநர் சாம் ஆண்டனின் '100' படத்தில் பணியாற்றியபோது நடிகர் யோகி பாபுவுடன் எனக்கு நல்ல பழக்கம் உண்டானது. ஒரு நல்ல திரைக்கதையுடன் வா என அப்போது யோகி பாபு கூறினார். தயாரிப்பாளர்கள் என் மீது மிகப்பெரும் நம்பிக்கை கொண்டிருந்தனர். மிகவும் நேர்த்தியான அதே நேரம் ரசிகர்கள் கொண்டாடும்படியான கமர்ஷியல் திரைக்கதையை உருவாக்க நினைத்தேன்.
தமிழ் சினிமா ஏற்கனவே 'ஜாம்பி'களை கொண்டு படமெடுத்து விட்டது எனவே நான் கொஞ்சம் வித்தியாசமாக நரமாமிச குழுவை மையப்படுத்தி படமெடுக்க நினைத்தேன். இந்த வகை திரைப்படங்கள் ஹாலிவுட்டில் மிகவும் புகழ்பெற்றவை. ஆனால் அங்கு ஹாரரும் திரில்லும் கலந்தே எடுப்பார்கள். நான் அதில் ஹியூமரை இணைத்து உருவாக்கினேன். இந்த வகை படம் தமிழ் திரையுலகிற்கு முற்றிலும் புதிதானது.
ரசிகர்கள் பொழுதுபோக்கிற்காக மிகப்பெரும் தொகையை செலவிடுகிறார்கள். இப்படம் சில மணி நேரம் அவர்களை சந்தோஷப்படுத்துவதாக இருக்கும். நாம் தியேட்டரில் படம் பார்த்து கொண்டாடி ஒரு வருடம் ஆகிவிட்டது. பெரும் முன்னேற்பாடுடன் துணிந்து திரையரங்கில் படத்தை வெளியிட்ட 'மாஸ்டர்', 'ஈஸ்வரன்' படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அப்படங்களால்தான் எங்கள் படமும் திரையரங்கில் வெளியாகவுள்ளது” என்று கூறினார்.
இவரைத் தொடர்ந்து இப்படத்தை வெளியிடும் சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் கூறியதாவது, விஜய்யின் 'மாஸ்டர்' திரைப்படம் பெரும் தடைகளை முறியடித்து சாதனை படைத்துள்ளது. பொது முடக்க காலத்தில் யாரும் இனி திரையரங்கிற்கு வரமாட்டார்கள் என்கிற மாயையை 'மாஸ்டர்' படம் உடைத்திருக்கிறது. ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் திரையரங்கில் படத்தை ரசிப்பது பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. 'மாஸ்டர்' படத்தால் ஓடிடியில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த பல படங்கள் தற்போது பின்வாங்கிட்டன. சினிமா மீது பெரும் அர்ப்பணிப்பும் காதலும் கொண்ட இப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.