'சொக்கத் தங்கம்' படத்தில் விஜயகாந்த்துக்கு ஜோடியாக நடித்து, தமிழ் ரசிகர்களின் மனதை ஏணி போட்டு எட்டிப் பறித்தவர், செளந்தர்யா.
இவர் 1976ஆம் ஆண்டு, ஜூலை 18ம் தேதி கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டத்தில் உள்ள 'முலபாகிலு' எனும் இடத்தில் பிறந்தார்.
1992ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான 'கந்தர்வா' எனும் படத்தின் மூலம் முதன்முதலாக திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். தமிழில் நவரச நாயகன் கார்த்தியின் பொன்னுமணி படத்தின் மூலம் அறிமுகமானார். கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளில் நடித்து,முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
தமிழ் இளைஞர்களின் கனவுக்கன்னி
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அருணாச்சலம், படையப்பா ஆகிய இரண்டு படங்களில், வெளிப்படுத்திய தனது அட்டகாசமான நடிப்பால் தமிழ் இளைஞர்களின் கனவுக்கன்னியாகவே மாறினார், செளந்தர்யா. திரைத்துறை மட்டுமின்றி பாஜகவின் முக்கிய அரசியல் பிரமுகராகவும் திகழ்ந்தவர்.
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு
இவர் 2004ஆம் ஆண்டு, ஏப்ரல் 17ஆம் தேதி பாஜவுக்கு ஆதரவாக பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள ஹெலிகாப்டரில் பயணித்தபோது ஏற்பட்ட விபத்தில் செளந்தர்யா உயிரிழந்தார்.
பெங்களூரு அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், உடன் பயணித்த அவரது சகோதரர் அமர்நாத்தும் உயிரிழந்தார். நடிகை செளந்தர்யா உயிரிழந்தபோது அவருக்கு வெறும் 27 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களை 'சொக்க' வைத்த சொக்கத்தங்கம்
சந்திரமுகி படத்தின் கன்னட வெர்ஷனான 'ஆப்தமித்ரா’, இவரது மறைவுக்கு பின்னரே வெளியானது. இவர் தமிழ்த் திரையுலகில் இறுதியாக 2003ஆம் ஆண்டு விஜயகாந்த் உடன் நடித்த சொக்கத்தங்கம் திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி நினைவுகளைப் பகிரும் ரசிகர்கள்
நடிகை செளந்தர்யா உயிரிழந்து 17 ஆண்டுகள் நிறைவு பெற்றும், இன்றளவும் அவரது புகழ் சற்றும் குறைவில்லை. இந்நிலையில் #Happybirthdaysoundarya என்ற ஹேஷ்டேக்கை சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கி, அவரது நினைவுகளை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க:80’ஸ் கேரக்டர்... ஸ்போர்ட்ஸ் மேன்... சார்பட்டாவுல எல்லாம் தானா அமைஞ்சது- ஆர்யா ஓபன் டாக்