ஜூன் மாதம் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கக் கோரி அதன் பொதுச்செயலாளராக இருந்த விஷால் தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஜூன் 22ஆம் தேதி தனது இல்லத்தில் விசாரித்தார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டாம் என ஐசரி கணேஷும், அவரது நண்பருமான அனந்தராமனும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷை அணுகியுள்ளனர்.
ஐசரி கணேஷ், அனந்தராமனுக்கு ரூ.10 லட்சம் அபராதம்!
11:44 July 29
சென்னை: நடிகர் சங்கத் தேர்தல் வழக்கில் தலையிட்டது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐசரி கணேஷை திருநங்கைகள், கைவிடப்பட்ட குழந்தைகளின் நல உதவிக்காக ரூ.10 லட்சம் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஐசரி கணேஷ், அனந்தராமன் ஆகியோர் நேரில் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தனர்.
அதில், நீதிபதியிடம் பேசியது தொடர்பாக ஐசரி கணேஷுக்கு எதுவும் தெரியாது என அனந்தராமன் குறிப்பிட்டுள்ளார். ஐசரி கணேஷின் பதில் மனுவில், தான் பகிரங்க மன்னிப்பு கோருவதாகவும், நீதிமன்றம் உத்தரவிட்டால் நலத்திட்ட உதவிகள் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், இரண்டு வாரத்தில் திருநங்கைகள், கைவிடப்பட்ட குழந்தைகள் ஆகியோரின் நலத்திட்டத்திற்காக 10 லட்சம் ரூபாயை மாநில சட்டப்பணிகள் ஆணையத்திடம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.