நடிகர் விவேக்கின் உடல்நிலை குறித்து, சிம்ஸ் மருத்துவமனை துணைத் தலைவர் ராஜு சிவசாமி, தமிழ்நாடு சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தனர்.
அப்ப்போது, பேசிய ராஜு சிவசாமி, "நடிகர் விவேக்-ஐ, இன்று (ஏப்.16) காலை 11 மணியளவில் அவரது குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அப்போது அவர் மயங்கிய நிலையில் இருந்தார். அவருக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டுள்ளது. இதயத்தின் இடதுபுற ரத்தநாளத்தில் 100 விழுக்காடு அடைப்பு இருந்தது.
ஆஞ்சியோ மூலம், தற்போது அடைப்பு சரி செய்யப்பட்டு அவர் தீவிர சிகிச்சையில் இருக்கிறார். அடுத்த 24 மணி நேரம் கண்காணிப்புக்கு பின்னர் தான் அடுத்த கட்டம் குறித்துச் சொல்ல முடியும். அவரது உடல்நிலை சற்று கவலைக் கிடமாகத்தான் உள்ளது. அவருக்கு முதல் முறையாக மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கும் கரோனா தடுப்பூசிக்கும் சம்பந்தமில்லை. எக்மோ கருவி உதவியுடன் தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தார்.
பின்னர் பேசிய சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், விவேக்குடன் சேர்த்து, நேற்றைய தினம் 830 பேருக்கு அதே மருத்துவமனையில் தடுப்பூசி போட்டப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்நாடு முழுவதும் 5 லட்சத்து 68 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. அவர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. தடுப்பூசி போட்டதன் மூலம் விவேக்கிற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை இல்லை. தடுப்பூசியால் பாதிப்பு ஏற்படுமானால், ஊசிப் போட்டுக் கொண்ட 15 நிமிடத்துக்குள் தெரிந்துவிடும்.
சிம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் செய்தியாளர் சந்திப்பு விவேக்கிற்கு ஏற்பட்டுள்ள நுரையீரல் பிரச்னையை சரி செய்ய எக்மோ கொடுக்கப்படுகிறது. இதயநோய், சிறுநீரக தொற்று, சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய் போன்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கட்டாயம் தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும். நேற்றைய (ஏப்.15) தினம் அவர் தடுப்பூசி போட்டுக் கொண்டார். எனக்கே அவரின் சிரித்த முகம் தான் நியாபகம் வருகிறது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: நடிகர் விவேக்கிற்கு எக்மோ சிகிச்சை