சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு, திண்டுகல்லில் நடைப்பெற்று வருகிறது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்திற்கு தற்காலிகமாக 'விஜய்சேதுபதி 46' எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றபோது, அரசின் விதிமுறைகளை மீறி படக்குழுவினர் முகக்கவசம் அணியாமல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் படப்பிடிப்பு நடத்தியதாக தகவல் பரவியது. இதனையடுத்து ஆங்கிலப் பத்திரிக்கையின் புகைப்படக் கலைஞர் புகைப்படம் எடுக்க அங்கு சென்றார். அப்போது அங்கிருந்த படக்குழுவினர் அவரைத் தடுத்து நிறுத்தி, ஒருமையில் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து திண்டுக்கல்லைச் சேர்ந்த சக பத்திரிகையாளர்கள் இதுகுறித்து கேள்வி கேட்கச் சென்றபோது, படத்தின் தயாரிப்பு குழுவைச் சேர்ந்த ஒருவர் பத்திரிகையாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு தாக்க முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து பத்திரிகையாளர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பத்திரிக்கையாளர்களுடன் வாக்குவாதில் ஈடுபட்ட விஜய்சேதுபதி நடிகர் விஜய்சேதுபதி வந்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய போதும் அவர்கள் போராட்டத்தைக் கைவிட மறுத்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பத்திரிக்கையாளர்களுக்கு மிரட்டல் விடுத்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதனால் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
மேலும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மீறியதாக படக்குழுவினருக்கு மாநகராட்சி அலுவலர்கள் 5,000 ரூபாய் அபராதம் விதித்தனர். அதுமட்டுமல்லாது பேருந்து நிலையத்தில் படப்பிடிப்பு நடத்த முறையான அனுமதி பெறவில்லை என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.