தந்தை பின்புலத்தில் வந்த கதாநாயகன், முக அழகும் கிடையாது, நடிகருக்கான தோற்றமும் கிடையாது என விமர்சிக்கப்பட்டவர் ரசிகர்களால் தளபதி என்றழைக்கப்படும் ஜோசப் விஜய். ஆனால், இன்று அவர் திரையில் தோன்றினால் ரசிகர்களை மயக்கும் வித்தை கொண்டவராகவும், குழந்தை முதல் பெரியவர்கள் வரை ரசிக்கக் கூடிய வெற்றி நாயகனாகவும் வலம்வருகிறார்.
இவர் பெயரைச் சொன்னால் போதும் கொண்டாட்டமே அதிரவைக்கும். கோடிக்கணக்கான ரசிகர்களின் உயிர்பந்தமாய் இருக்கும் விஜய், ரசிகர்களின் கரகோஷங்களின் நடுவே நடந்து வந்தால் அரங்கமே அதிரும். 'என் நெஞ்சில் குடியிருக்கும் எனது அன்பான ரசிகர்களே' என்னும் அந்த ஒற்றைச்சொல் அவரது ரசிகர்களை கட்டிப்போடும் மந்திரச்சொல்.
மவுனமாய் இருந்து தமிழ் மக்களை கடந்து கேரளா, ரசிகர்களின் நெஞ்சங்களில் குடிகொண்டிருக்கிறார் விஜய். இவர் தற்போது பாக்ஸ் ஆபிஸின் வசூல் சக்கரவர்த்தியாக திகழ்கிறார். இன்று அவரது 45ஆவது பிறந்த நாளை சரவெடியாய் விஜய் ரசிகர்கள் தெறிக்க விடுகின்றனர். தமிழ் சினிமாவில் வெற்றிகளையும், தோல்விகளையும் யதார்த்தமாக ஏற்றுக்கொள்ளும் இளைய தளபதியாக இருப்பவரை 'தரணி ஆள வா தளபதியே' என்று அழைக்கும் அளவிற்கு அவரது உச்சம் தொட்ட தளபதியாக வளர்ந்துள்ளார்.
நடிப்பையும் தாண்டி அரசியலுக்கு வர அச்சாரம் போடும் இவர், விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளையும் செய்துவருகிறார். படிக்க பணம் இல்லாமல் தவிக்கும் இளைஞர்களை படிக்க வைத்துள்ளார்.
இவரைப்பற்றி கூறினால் பட்டியல்கள் ஏராளம் நீளும். ஆனால், அவர் மீதான வெறுப்பு விமர்சனத்தை தாண்டி பொதுவுடமை நாயகனாக அவரை பாருங்கள் எல்லோருக்கும் பிடித்த செல்லப்பிள்ளையாக உங்கள் வீட்டுப் பிள்ளையாக இருப்பார். ஒரு இயக்குநரின் மகன் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வளர்ந்திருப்பது எல்லோரையும் வியக்கவைக்கிறது. விமர்சனங்கள் மூலம் வளர்ந்த தளபதி விமர்சனங்களால் வெற்றிகளைப் பெற்றார்.
அவர் பாணியில் சொல்ல வேண்டும் என்றால் 'நம்மை சிலர் உசுப்பேத்தும்போது உம்முன்னு, கடுப்பேத்தும்போது கம்முனு இருந்தா வாழ்க்கை ஜம்முனு இருக்கும்'. இது விஜயை விமர்சிப்பவர்களுக்கு சமர்ப்பிக்கப்படும். தனது 10 வயதில் திரை முன்பு நடிக்க ஆரம்பித்தவர் 'நாளைய தீர்ப்பு' படத்தில் கதாநாயகனாக தோன்றினார். அவர் நடித்த முதல் படத்திலேயே பலவிதமான அவமானங்களை சந்தித்தார். பத்திரிகை நாளிதழ்கள் அவரது முக தோற்றத்தை கடுமையாக விமர்சித்தன. அன்றைய காலகட்டத்தில் புரட்சி இயக்குநர் என்று பெயர்பெற்ற எஸ்.ஏ. சந்திரசேகரின் மகன் ஜோசப் விஜய்க்கு மிகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. 'இது ஒரு முகம் இதைப்பார்க்க காசு கொடுத்து பார்க்கணும்' என்று பிரபல நாளிதழில் செய்திகள் வந்ததாக விஜயின் தந்தை சந்திரசேகரே கூறியுள்ளார்.
இன்று அதே நாளிதழ் அவரது புகைப்படத்தை அட்டையின் முதல் பக்கத்தில் வெளியிட்டு பல லட்சம் பிரதிகளை விற்று லாபம் பார்க்கிறது. இது வெற்றியல்ல தோல்வியில் கிடைத்த பாடம். நடிப்பைத் தாண்டி விஜய் நடனத்தில் புலியாக திகழ்ந்தார். இவரது தந்தை இயக்கிய மாண்புமிகு மாணவன், தேவா, ரசிகன் ஆகிய படங்களில் இவர் ஆடிய நடனம் அப்பொழுது இருந்த உச்ச நடிகர்களையும் புருவம் உயர்த்தவைத்தது.
நடிப்பை மட்டுமே செய்யும் நடிகர்கள் நடனத்தில் கை, காலை ஆட்டிவிட்டு சென்றுவிடுவார்கள். அதனை மாற்றியமைத்தவர் விஜய்தான். 90களுக்கு பிறகு வந்த நடிகர்கள் அனைவரும் நடிப்பையும் தாண்டி நடனத்திலும் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். இதற்கு முதல் அச்சாரம் போட்டது விஜய்தான்.
தமிழ் சினிமாவில் விஜயை பின்பற்றி வந்த நடிகர்களில் பலர் உள்ளனர். தனது நடனத்தின் மூலம் ரசிகர்களை கவர ஆரம்பித்தார். துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே, பிரியமுடன் ஆகிய படங்களில் தாய்மார்களை கவர்ந்தார். முக்கியமாக துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் அதிக பெண் ரசிகர்கள் கிடைத்தனர். தனது தங்கை இறந்துபோன சோகத்தை தீர்க்க பல தங்கைகள் அவருக்கு ரசிகையாக படையெடுத்தனர்.