கடந்த 2015 ஆம் ஆண்டு திரைப்பட தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் தயாரிப்பில், ’வீர தீர சூரன்’ என்ற திரைப்படத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால், சூரி ஆகியோர் நடிப்பதாக ஒப்பந்தமாகி படப்பிடிப்புகள் நடந்தன. அப்போது சூரிக்கு 40 லட்ச ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது. எனினும் சம்பளம் தராதது குறித்து சூரி கேட்டபோது, சம்பளத்திற்குப் பதிலாக மேலும் சில கோடிகளை கொடுத்தால் நிலம் வாங்கித் தருவதாக படத்தயாரிப்பாளர் அன்புவேல் ராஜனும், ஓய்வு பெற்ற டிஜிபி ரமேஷ் குடவாலாவும் (விஷ்ணு விஷாலின் தந்தை) கூறியதாகத் தெரிகிறது.
அதன்படி, சென்னையை அடுத்த சிறுசேரியில் நிலம் வாங்கி தருவதாகக்கூறி, ரமேஷ் குடவாலா மற்றும் அன்புவேல் ராஜன் இருவரும் நடிகர் சூரியிடம் ரூ.3.10 கோடி பெற்று நிலத்தை விற்பனை செய்தனர். நிலம் வாங்கிய பிறகு அதில் பல பிரச்சனைகள் இருப்பது தெரிந்த சூரியிடம், நிலத்தைத் திருப்பி வாங்கி கொள்வதாகவும், பணத்தை திருப்பி தருவதாகவும் ஒப்பந்தம் ஒன்றை ரமேஷ் குடவாலா பதிவு செய்துள்ளார்.
ஆனால், வாங்கிய பணத்தில் 40 லட்ச ரூபாய் மட்டுமே சூரியிடம் கொடுக்கப்பட்டு, மீதி ரூ.2.70 கோடியை தராமல் ஏமாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சூரி தொடர்ந்த வழக்கில், முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா மற்றும் அன்புவேல் ராஜன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.