தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் நடிகர் சௌந்தரராஜா. கதையின் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும்போதே வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருகிறார்.
'சுந்தர பாண்டியன்', 'தர்மதுரை', 'கடைக்குட்டி சிங்கம்', 'ஜிகர்தண்டா', 'தெறி', 'பிகில்' போன்ற படங்களில் கவனிக்க வைத்த சௌந்தரராஜா, தனக்கென ஒரு பாதையில் வளர்ந்து வருகிறார்.
இவர் ஒரு நடிகராக மட்டும் இல்லாமல், சமூக சேவையிலும் ஆர்வமுள்ளவராக இருந்து வருகிறார். மண்ணுக்கும் மக்களுக்கும் சமூக நல அறக்கட்டளை மூலம் பல நல்ல விஷயங்களை செய்துவருகிறார். சமீபத்தில் கரோனா ஊரடங்களில் அவதிப்பட்டவர்களுக்கு உணவு கொடுத்து உதவினார்.
இதற்கிடையில் நேற்று (ஆக.13) தனது பிறந்தநாளை கொண்டாடும் சௌந்தரராஜா, தனது 'மண்ணுக்கும் மக்களுக்கும்' சமூக நல அறக்கட்டளையின் 4ஆவது ஆண்டு தொடக்க விழாவையும் சேர்த்து கொண்டாடினார்.
இவ்விழாவை முன்னிட்டு இந்த ஆண்டின் பருவ மழைக் காலத்தில் தமிழ்நாடு முழுவதும் பனை, நாட்டு மரக் கன்றுகளை அரசு வழிகாட்டுதலின்படி, ஊரடங்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு, ஏரிக்கரைகள், மலை குன்றுகள், பள்ளி, கல்லூரி, தனியார், அரசு கட்டிடங்களில் நட்டு அதை பாதுகாக்கவும் வழிவகை செய்திருந்தார். இந்நிகழ்வு பல மாவட்டங்களில் சிறப்பாக நடைபெற்றது.
இதுகுறித்து நடிகர் சௌந்தரராஜா பேசுகையில், "மண்ணுக்கும் மக்களுக்கும் சமூகநல அறக்கட்டளையின் 4ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நண்பர்கள், உறவுகள் அனைவரும் தமிழ்நாடு முழுவதும் பருவ மழைக்காலத்தில் 25 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு அதை பராமரிப்பதை ஒரு சவாலாக எடுத்து இருக்கிறோம்.