'பிச்சைக்காரன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சசி இயக்கியுள்ள திரைப்படம் 'சிவப்பு மஞ்சள் பச்சை'. சித்தார்த், ஜி.வி. பிரகாஷ் நாயகர்களாக நடித்துள்ள இத்திரைப்படத்தில் மலையாள நடிகை லிஜோமோல் ஜோஸ், தீபா இராமானுஜம் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
போக்குவரத்து காவலராக சித்தார்த்தும், பைக் ரேஸராக ஜி.வி. பிரகாஷும் நடித்துள்ளனர். அதிரடி சண்டைக் காட்சிகள் அட்டகாசமான பைக் சேசிங் காட்சிகளுடன் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து சித்தார்த் ஈடிவி பாரத்துக்கு சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார்.
சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் வரவேற்பு எப்படி உள்ளது?
நாங்கள் நினைத்ததைப் போன்று நல்ல வரவேற்பு உள்ளது. ஏனென்றால் இயக்குநர் சசி மீது எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. அதுமட்டுமல்லாமல், இந்த படத்தை ரிலீசுக்கு முன்பாகவே நான் பார்த்துவிட்டேன். இந்த படத்தை ஆடியன்ஸ் கொண்டாடுவார்கள் என்று நினைத்தோம் அதேபோன்று திரையரங்கில் குடும்பத்தோடு ஃபீல் பண்ணி படம் பார்த்தார்கள். இது சசி படம். அனைத்து விதமான மக்களையும் திருப்திபடுத்தும் வகையில் இந்த படம் இருக்கும்.
ஒரு குடும்பத் தலைவனாக எமோஷனலான ஒரு கதாபாத்திரத்தில் நடித்தது குறித்து?
இதுபோன்ற குடும்பப் பாங்கான படங்களில் தெலுங்கில் அதிகமாக நடித்துள்ளேன். அதனால் இதுபோன்ற உணர்வுமிக்க கதாபாத்திரத்தில் நடிப்பதில் எனக்கு அனுபவம் உள்ளது. தமிழில் அப்படி நடித்ததில் இதுதான் முதல் படம். முதன்முறையாக போலீஸ் வேடத்தில் இந்த படத்தில் நடித்துள்ளேன். ஒரு பொறுப்பான போலீசாக மட்டுமில்லாமல் நல்ல குடும்பத் தலைவனாகவும் நல்ல கணவனாகவும் நல்ல மாமனாகவும் இப்படி எல்லா உணர்வுகளிலும் நடிக்க வேண்டிய சூழல் இருந்தது. நான் நன்றாகவே நடித்துள்ளேன் என்று நினைக்கிறேன் படம் நன்றாக வந்துள்ளது.
இந்தக் கதையை தேர்ந்தெடுக்க காரணம் ?
கதையை கேட்டவுடன் ஆழமாக என் மனதை தொட்டது. அதுமட்டுமல்லாமல் எனக்கு அக்கா இருக்கிறார். அதனால், அக்கா தம்பி உறவு மிகவும் எளிதாக எனக்கு புரிந்தது. அதுமட்டுமல்லாமல் ட்ராஃபிக், சமூகப் பொது நலன் உள்ள படங்கள் வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பேன்.
அந்த வரிசையில் இந்த படமும் ஒரு நல்ல மெசேஜ் சொல்லும் படமாக அமைந்தது. கருத்தை மக்களுக்கு திணிக்கும் வகையில் இருக்காது. கண்ணாடியை கொடுத்து உங்கள் முகத்தை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறும் படமாக இருக்கும். இதுபோன்ற படங்கள் மிக குறைவாகவே வரும் இந்த படத்தின் ரீச் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்றே நான் நம்புகிறேன்.
இந்தப் படம் மூலம் மீண்டும் நீங்கள் தமிழில் நடிப்பதற்கு வாய்ப்பு அமையுமா?
நான் எங்கும் போகவில்லை. நான் இறுதியாக நடித்த படமும் வெற்றிப்படம்தான். வரிசையாக வெற்றி படங்களை கொடுத்தேனா வருஷத்துக்கு ஒரு படம் கொடுத்தேனா என்ற கணக்கெல்லாம் இல்லை. நான் நடித்த கடைசி படமும் ஹிட். இந்த படமும் ஹிட். இனி வரப்போகும் படமும் ஹிட் ஆகும் நல்ல படம். அனைவரும் பார்க்கும் படமாக அமைய வேண்டும் என்பதுதான் என் ஆசை.
உங்கள் அடுத்த படங்கள் பற்றி?
இயக்குநர் கார்த்திக் கிரிஷ் படத்தில் நடித்துள்ளேன். அடுத்த வாரம் ரிலீஸ் ஆக உள்ளது. என்னுடைய கேரியரில் இது ஒரு புதுமையான படம். இதைத்தாண்டி சாய் சேகர் இயக்கத்தில் அருவம் படம் நன்றாக வந்துள்ளது. இந்த படங்களில் நடிப்பதற்கு ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது. இரண்டு மூன்று மாதத்திற்குள் இந்த இரண்டு படங்களும் திரைக்கு வரும்.
வலைத்தளங்களில் கருத்துக்களைக் கூறி வந்த நீங்கள் இப்போது நடிக்கும் படத்தில் கூற உள்ளீர்களா?
இல்லை... அனைவரும் என்னிடம் கருத்தை எதிர்பார்த்தார்கள் என்றால் என்னால் நடிக்க முடியாது. அதனால் முதலில் நான் நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன் அதன்பிறகு கருத்து சொன்னால் போதும்.