மதுரையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பண்பாட்டு கழகத்தின் சார்பில் 'கீழடி வைகை நதி நாகரிகம்' என்னும் தலைப்பில் சிறப்பு மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் சசிகுமார் மற்றும் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனர்.
கீழடி அகழாய்வு குறித்துப் பேசிய நடிகர் சசிகுமார், 'என்னடா கீழடிக்கும் உனக்கும் சம்பந்தம் இருக்கு... இவனை மேடையில் ஏற்றி பேச சொல்றாங்க என்று நினைக்க வேண்டாம். எனக்கும் கீழடிக்கும் நிறைய பந்தம் இருக்கிறது. 2015ஆம் ஆண்டு கீழடியில் நடைபெற்ற அகழாய்வை நேரில் சென்று பார்வையிட்டேன். அங்கு சென்றபோது தமிழர்களின் கலாசாரத்தையும், நாகரிகத்தையும் அறிந்துகொண்டேன்.
ஒரு அர்ப்பணிப்போடு, தனது உழைப்பை புகுத்தி தொல்லியல்துறையினர் அகழாய்வை செய்து வருகின்றனர். சு.வெங்கடேசன் கீழடிக்காக தொடர்ந்து போராடி வருகிறார். அகழாய்வுப் பணிக்குப் பொறுமை தேவை. தொல்லியல் துறை வல்லுநர்கள் தமிழர்களின் கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் வெளிக்கொண்டுவர மிகவும் சிரமப்படுகின்றனர். இங்கு கிடைக்கும் ஒவ்வொரு பொருளும் நம்முடைய வரலாற்றை எடுத்துரைக்கிறது.