தமிழ் சினிமாவில் பொதுவாக ஹீரோ, ஹீரோயினைத் தாண்டி குணச்சித்திர கதாபாத்திரங்களின் வழியாக தங்கள் ஸ்க்ரீன் ஸ்பேஸை சரியாகக் கையாண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பவர்கள் வெகு சிலரே. அவ்வாறு 80களின் மத்தியில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்களான ரஜினி - கமல் இருவருடனும் இணைந்து அதிகம் நடித்து தன் தனித்துவ நடிப்பால் ஜொலித்த நடிகர்தான் சரத்பாபு.
இயக்குநர் சிகரத்தால் அறிமுகம்
தெலுங்கு நடிகரான சரத்பாபு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்கள் அனைத்திலும் நடித்துள்ளார். 1973ஆம் ஆண்டு ’இயக்குநர் சிகரம்’ பாலச்சந்தரின் ’பட்டினப்பிரவேசம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
கமல் - சரத்பாபு கூட்டணி
தொடர்ந்து ’நிழல் நிஜமாகிறது’ படத்தின் மூலம் கமல்ஹாசனுடன் இணைந்து முதல்முறை பணியாற்றினார். ஆனாலும் மகேந்திரன் இயக்கத்தில் ரஜினியுடன் அவர் நடித்த ’முள்ளும் மலரும்’ படத்தின் மூலமே தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்க்கத் தொடங்கினார்.
”செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா” எனும் இளையராஜா பாடலில் ஷோபாவை தாண்டி ஒரு முகம் நம் மனதில் வந்து வந்து செல்லும் என்றால், மலை முகடுகளில் பாக்யராஜ் கண்ணாடி அணிந்தவாறு வண்டி ஓட்டும் சரத்பாபுவின் முகம் தான்.
அப்படம் முதல் ரஜினியுடனான சரத்பாபுவின் ஸ்கிரீன் ஸ்பேஸ் ரசிகர்களை ஈர்க்க தொடங்கியது.
ரஜினி - சரத் பாபு கூட்டணி
தொடர்ந்து எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்தின் தனித்துவ ஆன்ட்டி-ஹீரோ படமான நெற்றிக்கண்ணில் அவருடன் போட்டி போடும் மருமகனாக திரையில் ஜொலித்து குடும்பப் பட ஆடியன்ஸ்களைக் கவர்ந்திருப்பார் சரத்பாபு.
சரத்பாபு - ரஜினிகாந்த் காம்போ தொடர்ந்து ஹிட் அடிக்கவே, அண்ணாமலை, முத்து என கமர்ஷியல் சினிமா ரசிகர்களால் மறக்கவே முடியாத இரண்டு மாபெரும் ஹிட் படங்களில் ரஜினியுடன் மீண்டும் நடித்தார்.
முத்து படத்தில் ரஜினியுடன் சரத் பாபு நடிகர் ரஜினிகாந்தின் படங்களில் அவருடன் போட்டி போடும் கதாபாத்திரங்கள் மீது நிஜ வாழ்விலும் அவரது ரசிகர்கள் வெறுப்பை காண்பித்து வந்த காலம் அது. அத்தகைய காலக்கட்டத்திலும் தொடர்ச்சியாக துணிந்து இத்தகைய கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து சரத்பாபு அப்ளாஸ் அள்ளினார்.
மற்றொருபுறம் சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து போன்ற நேரடி தெலுங்கு படங்களில் கமல்ஹாசனுடன் சரத்பாபு நடித்த நிலையில் கமல் - சரத் பாபு கூட்டணி தெலுங்கில் பிரசித்தி பெற்றது.
கமர்ஷியல் படங்கள் தாண்டி, சிக்கலான கதையம்சத்தைக் கொண்ட பாலச்சந்தரின் ‘நூல்வேலி’, மகேந்திரனின் சிறந்த படங்களுள் ஒன்றான ’உதிரிப்பூக்கள்’ போன்ற மறக்க முடியாத திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
எட்டு நந்தி விருதுகள்
தமிழ் சினிமாவில் இறுதியாக ’சிங்கம் 3’ படத்தில் தோன்றிய சரத்பாபு, தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இதுவரை தன் நடிப்பிற்காக எட்டு நந்தி விருதுகளைப் பெற்றுள்ள சரத்பாபு, இன்று தனது 70ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். ஈ டிவி பாரத் சார்பாக சரத்பாபுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
இதையும் படிங்க:’சயின்டிஸ்ட்ட கும்பிடுங்கடா’ - மக்கள் இயக்குநர் மணிவண்ணனை நினைவுகூறுவோம்!