ஆசிரியர்களை நினைவுகூர்ந்து வாழ்த்துகள் கூறிய ராஜ்கிரண் - ஆசிரியர் தின ஸ்பெஷல்
சென்னை: நடிகர் ராஜ்கிரண் தனக்கு ஒன்றாம் வகுப்பு முதல் பாடம் நடத்திய ஆசிரியர்களை நினைவுகூர்ந்து ஆசிரியர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
நாளை (செப்டம்பர் 5) நாடுமுழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நடிகர் ராஜ்கிரண் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பது, "ஆசிரியர் தின நன்னாளில், எனக்கு கல்விப்பிச்சை அளித்த ஆசிரியப்பெருந்தகையினர் அனைவரையும் நினைத்து மகிழ்கிறேன்.
1955ஆம் ஆண்டு முதல் 1966ஆம் ஆண்டு வரையிலான காலம். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை சதக்கத்துன் ஜாரியா ஆரம்பப்பள்ளியில் முதல் வகுப்பு ஆசிரியர் மோஸஸ் ஐயா அவர்களுக்கும், இரண்டாம் வகுப்பு ஆசிரியர் குமார் ஐயா அவர்களுக்கும், மூன்றாம் வகுப்பு ஆசிரியை
ஆசீர்வாதம் அம்மா அவர்களுக்கும், நான்காம் வகுப்பு ஆசிரியை செல்லம் அம்மா அவர்களுக்கும், ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் மாதவன் ஐயா அவர்களுக்கும்,
சதக்கத்துன் ஜாரியா நடுநிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு ஆசிரியர் சுப்பிரமணியம் ஐயா அவர்களுக்கும், ஏழாம் வகுப்பு ஆசிரியர் நைனார் முஹம்மது ஐயா அவர்களுக்கும், சிறப்பு தமிழாசிரியர் நடராஜன் ஐயா அவர்களுக்கும், எட்டாம் வகுப்பு ஆசிரியர் கேசவன் ஐயா அவர்களுக்கும்,
ஹமீதியா மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு ஆசிரியர் ஜனார்த்தனன் ஐயா அவர்களுக்கும், பத்தாம் வகுப்பு ஆசிரியர் ராஜூ ஐயா அவர்களுக்கும், பதினொன்றாம் வகுப்பு ஆசிரியர் ஜெகநாதன் ஐயா அவர்களுக்கும்,
சதக்கத்துன் ஜாரியா பள்ளிகளின் தலைமை ஆசிரியர் செல்வம் ஐயா அவர்களுக்கும், ஹமீதியா மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜார்ஜ் ஐயா அவர்களுக்கும், என் பணிவையும் நன்றிகளையும் காணிக்கையாக்குகிறேன்.
அவர்களெல்லாம் எங்கிருக்கிறார்கள் என்பது தெரியாவிடினும் அவர்கள் மனசாந்தியுடனும் சமாதானத்துடனும் நிறைவோடு வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்" என தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ராஜ்கிரண் பதிவிட்டுள்ளார்.