தமிழ் சினிமாவில் வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதைக் கொள்ளையடித்தவர் பசுபதி. இவர் இன்று தனது 50ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். கூத்துப்பட்டறை என்ற மேடை நாடகக் குழுவுடன் இணைந்து இன்னும் செயல்பட்டுவரும் இவருக்கு, தமிழ் சினிமாவில் சிறந்த நடிகனாக வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாக இருந்தது. தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது கடினம், அப்படி கிடைக்கும் வாய்ப்பை நழுவவிடாமல் தனது நடிப்பு திறமையால் தனித்துவமான இடத்தை பெற்றுள்ளார் பசுபதி. நாடகத்தின் மூலம் மக்களை மகிழ்வித்த கலைஞர்கள், தமிழ் சினிமாவில் கோட்டை கட்டி வாழ்ந்ததே அதிகம்.
அந்த வரிசையில் எம்ஜிஆர், கருணாநிதி, பி.யு.சின்னப்பா, நம்பியார், அசோகன், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், தியாகராஜ பாகவதர், டி. ஆர். மகாலிங்கம் உள்ளிட்டோர் தமிழ் சினிமாவில் வெற்றிக்கொடி நாட்டியவர்கள். தமிழ் உச்சரிப்பு, கலைநயம் பொருந்திய நடிப்பால் ரசிகர்களை அவர்கள் கட்டிப்போட்டனர். இதே நம்பிக்கையோடு தன்னையும் தமிழ் சினிமா ஏற்றுக்கொள்ளும் என்ற நினைவுகளோடு நடிகர் பசுபதி பல தயாரிப்பு கம்பெனிகளின் கதவுகளை தட்டினார்.
தட்டி தட்டி அவரது கைகள் தேய்ந்தன. வாய்ப்பிற்காக கால்கள் நடந்து நடந்து தேய ஆரம்பித்தன. கருப்பு நிறம், கவிதை பேசும் முகம், பொய் சொல்ல தெரியாத கண்கள், பசி வறுமை தன்னை வாட்டிய போதும் திறமையை நம்பி பல இரவுகள் தண்ணீரைக் குடித்து உறங்கியதுண்டு. ஒரு கலைஞனை தமிழ் சினிமா தேடிக்கொண்டிருக்கும் காலம் அது.
காலம் மாற மாற தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனைகளும் மாறியது. பார்த்த வில்லன் முகங்கள் ரசிகர்களுக்கு சலிப்புத் தட்ட தொடங்கிவிட்டன. பக்கம் பக்கமாய் வசனம் பேசி வில்லத்தனம் செய்யும் காட்சிகள் மாறின. வில்லன் என்பவன் ரவுடியாக இருக்க வேண்டும். மக்களை மிரட்டி மாமுல் வசூலிப்பது, பெண்களின் வாழ்க்கையை சீரழிப்பவனாக இருக்க வேண்டும். முகத்தில் அரிவாள், பிளேடால் கோடு வாங்கியவனாக இருந்தால், ஒரிஜினல் அக்மார்க் வில்லன் அவன்தான் என்று தமிழ் சினிமா முத்திரைக் குத்திவிட்டது.
இந்நிலையில், 2001ஆம் ஆண்டு நடிகர் நாசர் இயக்கி, நாயகனாக நடித்த 'மாயன்' படத்தில் ’டாமினிக் ராஜ்’ என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் பசுபதி அடியெடுத்து வைக்கிறார். வந்தது சிறிய வேடம்தான். ஆனால் பெயர், முகம் தெரியாத அந்த பையனின் நடிப்பை பார்த்து தமிழ் சினிமா அவரது விலாசத்தைத் தேடி அலைய ஆரம்பித்தது. அவரது இரண்டாவது படத்திலேயே இயக்குநர் மணிரத்னம் படமான ’கன்னத்தில் முத்தமிட்டாள்’ திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது. சிறிய வேடம் என்றாலும் அதை தட்டி கழிக்காமல் ஏற்றுக்கொண்டார் பசுபதி. மணிரத்னம் கல்லைக் கூட சிற்பமாக மாற்றிவிடுவார் என்ற நம்பிக்கையில், பசுபதி தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து நடித்த படம் அது.