தமிழ் திரைப்பட உலகின் அசைக்கமுடியாத வில்லன் நடிகராக வலம் வந்தவர் நடிகர் எம்.என்.நம்பியார். ராஜகுமாரி, பெண்ணரசி, ஆயிரத்தில் ஒருவன், ரகசிய போலீஸ் 115, ஜென்டில்மேன், எஜமான், வருஷமெல்லாம் வசந்தம், வின்னர் உள்ளிட்ட ஆயிரம் படங்களுக்கும் மேல் வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார். அவர் 2008ஆம் ஆண்டு தனது 89வது வயதில் உயிரிழந்தார்.
இந்த நிலையில், நம்பியாரின் நூற்றாண்டு விழா மகாகுரு என்ற தலைப்பில் சென்னை மியூசிக் அகாடமியில் நேற்று கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், நடிகர்கள் சிவக்குமார், ராஜேஷ், டெல்லி கணேஷ், நடிகைகள் சச்சு, வெண்ணிற ஆடை நிர்மலா, இயக்குநர் பி.வாசு உள்ளிட்ட ஏராளமான திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்த விழாவில் கலந்துகொண்ட பிரபலங்கள் பலரும், நம்பியார் உடனான தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.