'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான மாரி செல்வராஜ், தற்போது தனுஷை வைத்து 'கர்ணன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் தமிழில் இப்படம் மூலம் அறிமுகமாகிறார்.
நடிகர்கள் லால், நட்டி, யோகிபாபு, லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, கௌரி ஜி கிஷன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியல் மற்றும் தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் படுகொலையை மையமாக வைத்து உருவாகிவரும் இந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
திருநெல்வேலி, மாஞ்சோலை உள்ளிட்ட அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்றுவரும் நிலையில், இது தொடர்பான புகைப்படங்களை படக்குழு அவ்வப்போது வெளியிட்டுவருகிறது.