தமிழ் சினிமாவில் மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட்டாக அறிமுகமாகி ரஜினி, கமல் உள்ளிட்ட திரைப் பிரபலங்களுடன் பல படங்களில் நகைச்சுவை நடிகராக வலம்வந்தவர், சின்னி ஜெயந்த். இவரது மகன் ஸ்ருஜன் ஜெய் (27) 2019ஆம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில், எழுதிய முதல் முயற்சியிலேயே இந்திய அளவில் 75ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். மகனின் தேர்ச்சி குறித்து சின்னி ஜெயந்த் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்துக்கு, சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார்.
உங்கள் மகனைப் பற்றி கூறுங்கள்?
'தமிழ் சினிமா பின்னணியில் முதல் சிவில் சர்வீஸ் வெற்றியாளர் என் மகன் தான்' - நடிகர் சின்னி ஜெயந்த் - சின்னி ஜெயந்த் இன் மகன் சிவில் சர்வீஸ் எக்ஸாம் தேர்ச்சி
சென்னை: நடிகர் சின்னி ஜெயந்த்தின் மகன் ஸ்ருஜன் ஜெய் சிவில் சர்வீஸ் தேர்வு முடிவில் இந்திய அளவில் 75ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
எல்லா குழந்தைகளைப் போலும்தான் இருந்தார். படிப்பில் அதிகம் நாட்டம் இருந்ததால் படிப்பில் அவரை ஊக்குவித்தோம். அடையாறில் உள்ள சிஷ்யாவில் பள்ளிப் படிப்பு. அண்ணா யூனிவர்சிட்டியில் கல்லூரிப் படிப்பு. டெல்லியில் அசோகா யூனிவர்சிட்டியில் லிபரல் ஆர்ட்ஸ். சங்கர் அகாடமியில் ஐஏஎஸ் பயிற்சி வகுப்புகள். முழு நேரமும் படிப்பின் மீது கவனமாக இருப்பார். ஒரு மாணவனின் வெற்றி என்பது பள்ளியின் பின்புலம், நண்பர்களின் சேர்க்கை, சுற்றுச்சூழல் ஆகியவை காரணமாக இருக்கிறது. பெற்றோரின் கடமையாக, இவற்றை நாங்கள் அமைத்துக் கொடுத்தோம். அவருக்கும் சிறுவயது முதலே அதிக அளவில் படிப்பின் மீது நாட்டம்.
ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பது அவருடைய கனவா அல்லது உங்களுடைய தேர்வா?
என் மகன் சமூக சிந்தனையாளர். சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற அக்கறை உடையவர் என்பதால் ஐஏஎஸ் படிக்க வேண்டும் என்பது அவரின் கனவாக இருந்தது. அவரின் கனவுக்கு நாங்கள் உறுதுணையாக இருந்தோம். என்னைவிட எனது மனைவிதான் படிப்பு விஷயங்களில் அவருக்கு ஒரு உந்துசக்தியாகச் செயல்பட்டார்.
நடிகரின் மகன் நடிகனாகத்தான் ஆவார் என்ற சூழலில், சினிமா துறையில் அவருக்கு நாட்டம் இல்லையா?
படிப்பு தவிர, அவர் ஒரு ஆன்மிகவாதி, டென்னிஸ் பிளேயர், கர்நாடக இசையை நன்றாகப் பாடக் கூடியவர். கல்லூரி நாட்களில் அதிக ஸ்டேஜ் ஷோக்கள் நடத்தியுள்ளார். கல்வியில் எப்படி மிகுந்த ஆர்வமோ... அதேபோன்று கலைத்துறையிலும் ஆர்வம் உடையவர். சினிமாவும் சேவையும் அவருக்கு மிகவும் பிடித்த துறையாக இருக்கிறது.
வாய்ப்பு கிடைத்தால் சினிமாவில் நடிக்கமாட்டாரா?
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நானும் எனது நண்பர்களிடம் விசாரித்துப் பார்த்தேன். அவர்கள் கூறினார்கள் வடநாட்டில் நாலைந்து ஐஏஎஸ் அலுவலர்கள் சினிமாவிலும் நடித்துள்ளார்கள் என்று கூறினார்கள்.
கலைத்துறை என்பது வேறு; பப்ளிக் சர்வீஸ் என்பது வேறு; இரண்டுக்குமே கஷ்டப்பட்டுதான் வரவேண்டும். இவருக்கு கல்விச் செல்வம், கலைச்செல்வம் இரண்டும் இணைந்து இருக்கிறது. அது எங்களுக்கு மகிழ்ச்சி.
ஒரு தந்தையாக உங்கள் மகனின் வெற்றியை எப்படிப் பார்க்கிறீர்கள்?
எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே. குழந்தைகளுக்குத் தேவையான சூழ்நிலையை பெற்றோர்கள் அமைத்துக் கொடுக்க வேண்டும். அதில் தான் அவர்களின் வெற்றி அமைந்திருக்கிறது. எனக்கு மிகுந்த சந்தோஷம், எனது மகன் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றது.
இதேபோன்று கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தேவையான சூழ்நிலையை உருவாக்கி, அவர்களை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.
'ஒரு நடிகனின் மகன் நடிகன் என்று தான்' என்ற எண்ணம் இப்போது நிலவி வருகிறது. ஆனால் அதையும் தாண்டி சினிமா துறை சார்ந்த குழந்தைகள் மிகவும் நன்றாக படிக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். அவர்களை ஊக்குவித்து தட்டிக்கொடுத்தால் போதும். அவர்கள் சாதிப்பார்கள். கலைத்துறை சார்ந்த குழந்தைகள் படிப்பில் முன்னேற எனது மகனும் அவர்களுக்கு ஒரு உந்துசக்தியாக செயல்படுவார்.