தமிழில் நகைச்சுவை படங்களுக்கு, புதிய இலக்கணம் தந்தவர் இயக்குநர் சுந்தர்.சி. இவர் தான் இயக்கிய 'அரண்மனை', 'அரண்மனை 2' போன்ற பேய் படங்களில் நகைச்சுவையைப் புகுத்தி, குழந்தைகளும் கொண்டாடும் வகையில் எடுத்திருந்தார்.
பெரும் பட்ஜெட்டில் உருவாகும் அரண்மனை 3
'அரண்மனை' முதல் இரண்டு பாகங்கள் மிகப்பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தற்போது இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில், ஆர்யா நடிக்க, 'அரண்மனை 3' படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.
'அரண்மனை 3' படம் முதல் இரண்டு பாகங்களை விட இரு மடங்கு பட்ஜெட்டில் மிகப்பிரமாண்டமான வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில், ஆர்யா, ராஷி கண்ணா, சுந்தர்.சி முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க, மறைந்த நடிகர் விவேக், யோகி பாபு, சாக்ஷி அகர்வால், சம்பத், மனோபாலா, வின்சென்ட் அசோகன், மதுசூதன ராவ், வேல ராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத் ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இறுதிகட்டப்பணிகள் தீவிரம்
ஜெய்பூர் அரண்மனையில் கடந்த ஆண்டே 'அரண்மனை 3' படத்தின் படப்பிடிப்பு முழுமையடைந்தது. இந்தப் படத்தில் சிஜி (CG) பணிகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்டப்பணிகள் மும்முரமாக நடைப்பெற்று வருகின்றன.
இந்நிலையில், ஆகஸ்ட் 30 ஆம் தேதி 'அரண்மனை 3' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சத்யா இசையமைக்கும் இப்படத்தை குஷ்பு சுந்தர் தயாரிக்கிறார். விரைவில் இப்படம் குறித்த மற்ற அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: நடிகர் ஆர்யா குரலில் இளம்பெண்களிடம் மோசடி: நடந்தது என்ன?