தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கு பொதுத்தேர்தலும், காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலும் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா, துணைச் செயலாளர் சுதீஷ் ஆகியோர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர். ஆனால், அக்கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக ஓய்வெடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பரப்புரையின்போது உடல் நிலை சரியில்லாத விஜயகாந்தை காட்டி வாக்கு கேட்க வேண்டாம் என நடிகர் ஆனந்தராஜ் தெரிவித்துள்ளது.
இது குறித்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் தனது இல்லத்தில் நடிகர் ஆனந்தராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்,அப்போது, 'பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி, ஏழு பேர் விடுதலை சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளார்.
இது மிகவும் வேதனை அளிக்கிறது. மாநில அரசுக்கு இதில் அதிகாரம் இல்லை என்கிறபோது, ராகுல் காந்தி அல்லது பிரதமர் மோடி ஆகியோர் ஏழு பேர் விடுதலை குறித்து வாக்குறுதி அளிக்க வேண்டும். மேலும் கூட்டணியில் உள்ளவர்கள் இந்த உறுதியை பெற்றுத் தர வேண்டும். இது குறித்து வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.