கடந்த 1946, ஜூன் 4ஆம் தேதி ஆந்திர பிரதேச மாநிலம் நெல்லூரில் பிறந்தார் எஸ்.பி. பாலசுப்ரமணியம். கடந்த 1969ஆம் ஆண்டு வெளியான ‘சாந்தி நிலையம்’ படத்தில் இடம்பெற்ற ‘இயற்கை எனும்’ பாடல் அவர் குரலில் பதிவு செய்யப்பட்ட முதல் தமிழ்ப் பாடல் என்று கூறப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பாகவே அவர் பாடிய ‘அடிமைப் பெண்’ திரைப்படம் வெளியானது. இதில் அவர் பாடிய ‘ஆயிரம் நிலவே வா’ பாடல் மிகவும் பிரபலம்.
‘ஹோட்டல் ரம்பா’ என்ற படத்துக்கு எம்.எஸ்.வி இசையில், ‘அத்தானோடு இப்படி இருந்து எத்தனை நாளாச்சு’ என்ற பாடல்தான் எஸ்பிபியால் முதன்முதலாக பாடப்பட்டது என கூறப்படுகிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்தப் படம் வெளியாகவில்லை.
விருதுகளின் நாயகன்:
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, சிறந்த பாடகருக்கான தேசிய விருதை எஸ்பிபி ஆறு முறை வென்றுள்ளார். கடந்த 1979ஆம் ஆண்டு வெளியான ’சங்கராபரணம்’ திரைப்படத்தில் ‘ஓங்கார நாதானு’ என்ற பாடலுக்காக முதல் தேசிய விருதை பெற்றார். அதன்பிறகு ‘ஏக் துஜே கே லியே’ படத்தில் இடம்பெற்ற ‘தேரே மேரே பீச் மெய்ன்’, ’சாகர சங்கமம்’ படத்தின் ‘வேதம் அனுவனுவுனா’, ’ருத்ர வீணா’ படத்தில் ‘செப்பலானி உன்டி’, 'சங்கீத சாகர கானயோகி பஞ்சாக்ஷர காவய்’ படத்தில் இடம்பெற்ற ‘உமந்து குமந்து கானா’, ‘மின்சார கனவு’ படத்தில் ‘தங்க தாமரை’ ஆகிய பாடல்கள் முறையே ஒவ்வொரு தேசிய விருதை வென்றுள்ளார். கடந்த 2001ஆம் ஆண்டு, அவருக்கு பத்ம ஸ்ரீ விருதும், கடந்த 2011ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதும் வழங்கப்பட்டது.
எஸ்பிபியின் பன்முகத்தன்மை:
தமிழர்கள் மனதில் இடம்பிடித்த எஸ்பிபி. தெலுங்கு தேச மக்களால் பெரிதும் கொண்டாடப்படுபவர். அவர் தேசிய விருது பெற்ற ஆறு படங்களில், மூன்று தெலுங்கு படங்கள் ஆகும். பலராலும் சிறந்த பாடகர் என அறியப்படும் எஸ்பிபி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர், டப்பிங் ஆர்டிஸ்ட் என பன்முகத்தன்மை கொண்டவர். பகேதி சிவராம் இயக்கத்தில் உருவான தெலுங்கு ஆவணப்படத்துக்கு அவர் முதன்முதலாக இசையமைத்தார்.
அதேபோல் தமிழில் சிகரம், உன்னைச் சரணடைந்தேன் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். தெலுங்கில் உஷாகிரண் மூவிஸ் தயாரித்த ‘மயூரி’ திரைப்படத்தில் அவர் இசையமைப்பில் உருவான ‘ஈ படம் இலாலோனா நாட்ய வேதம்’ எனும் பாடல் இன்றும் தெலுங்கு மக்களின் மனதுக்கு நெருக்கமான பாடலாகும். இந்தப் படத்தை தமிழில் தயாரித்தார் எஸ்பிபி. அதன்பிறகு சுபசங்கல்பம், பாமனே சத்தியபாமனே உள்ளிட்ட படங்களை தயாரித்தார்.