'கல்யாண தேன்நிலா காய்ச்சாத பால் நிலா' என்ற வரிகளோடு மனதை வருடும் இதமான இசையுடன், கேட்டவுடனே முணுமுணுக்கும் விதமாக அமைந்துள்ள இந்தப் பாடலை கேட்ட பின் கும் பின்னர் பலரும் நினைப்பது, இந்த மென்மையான காதல் பாடல் இடம்பெற்றிருக்கும் படத்தை தேடி பார்க்க வேண்டும் என்பதுதான். ஆனால் இது ஒரு சீட் எட்ஜ் திரில்லர் படம் என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மலையாள இயக்குநர் மது இயக்கிருக்கும் கிளாசிக்கான இந்த மெலடி பாடல் அமைந்திருக்கும் படத்தின் பெயர் மெளனம் சம்மதம். பாடலில் காட்டப்படுவது போல் மம்முட்டி - அமலா உருகி காதலிக்கும் காட்சிகள் படத்தில் இல்லை. மாறாக விறுவிறுப்பான டிவிஸ்டுகளோடு ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியதே சுவாரஸ்மான உண்மை.
ஒரு கொலை, அது தொடர்பாக நீதிமன்றத்தில் நடக்கும் வாதங்கள்தான் மெளனம் சம்மதம் படத்தின் ஒன்லைன். கிட்டத்தட்ட படத்தில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான காட்சிகள் விசாரணைகள், நீதிமன்றத்தின் பின்னணியில் நடப்பதாகவே அமைந்திருக்கும்.
மலையாள சினிமாவின் மெகா ஸ்டாராக திகழும் மம்முட்டியின் முதல் தமிழப் படமான இது 1990 ஜூன் 15இல் வெளிவந்தது. இந்தப் படத்துடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அதிசயபிறவி என்ற பேண்டஸி கலந்த காமெடி படமும், 13ஆம் நம்பர் வீடு என்ற திகில் படமும் ரிலீசானது. ஒரே நாளில் மூன்று வெவ்வேறு வகைப் படங்கள் என ரசிகர்களுக்கு செம டிரீட் அமைய, மெளனம் சம்மதம் மூலம் வேற்று மொழி ஹீரோவான மம்முட்டியை சிறப்பாக வரவேற்றனர் தமிழ் ரசிகர்கள்.
தமிழில் ஹீரோவாக அறிமுகமாகும் முதல் படத்தில் டூயட் பாடல், ஹீரோயினிடம் கொஞ்சிப் பேசும் காதல் காட்சிகள், வேறு செண்டிமென்ட் இல்லாமல் முழுக்க கதையை மையப்படுத்தியே ராஜா என்ற கேரக்டரில் தோன்றியிருக்கும் மம்முட்டியின் நடிப்புக்கு பாராட்டு குவிந்தது மட்டுமில்லாமல், அவரது தெள்ளத்தெளிவான தமிழ் உச்சரிப்பு ரசிகர்களை பெரிதும் கவர்ந்த்து. இந்தப் படத்துக்கு பின்னர் தமிழிலும் அவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உருவாகியது. தற்போது சமந்தாவுக்கு இருப்பது போன்ற கிரேஸ், அவரது மாமியாரான அமலா முன்னணி நடிகையாக வலம் வந்தபோது ரிலீசானது இந்தப் படம்.