தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நெருப்பு வாயினில் ஓரமாய் எரியும்: #13yearsofpudhupettai - selvaragavan

செல்வராகவன் இயக்கத்தில் உருவான ‘புதுப்பேட்டை’ திரைப்படம் வெளியாகி 13 ஆண்டுகள் நிறைவடைந்ததை தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

pudhupettai

By

Published : May 27, 2019, 4:40 PM IST

Updated : May 27, 2019, 7:27 PM IST

தமிழ் சினிமாவில் வெளியான கேங்ஸ்டர் திரைப்படங்களில் ‘புதுப்பேட்டை’ படத்துக்கு எப்போதும் தனி இடம் உண்டு. புதுப்பேட்டை படத்துக்கு முன், புதுப்பேட்டை படத்துக்கு பின் என கேங்ஸ்டர் திரைப்படங்களை வரையறுக்கலாம் என சில சினிமா விமர்சகர்கள் சொல்வதுண்டு. செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், சிநேகா, சோனியா அகர்வால் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருந்த இத்திரைப்படம், 2006ஆம் ஆண்டு மே 26 அன்று வெளியானது.

‘புதுப்பேட்டை’ வெளியான சமயம் சரியான அங்கீகாரத்தைப் பெறவில்லை. இதற்கு முந்தைய செல்வராகவன் படம்போல் இத்திரைப்படம் இல்லை, கேங்ஸ்டர் படக்கதையை ஜவ்வாக இழுத்திருக்கிறார் என எக்கச்சக்க விமர்சனங்கள் எழுந்தன. எனினும் படம் வணிக ரீதியாக தோல்வியை சந்திக்கவில்லை. சில ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தை பார்த்தவர்கள் இதனை பெரிதும் கொண்டாடத் தொடங்கினார்கள். அதன்பிறகு மீண்டும் இந்தப் படத்தை பார்த்துவிட்டு பெரிய அளவில் விமர்சனம் எழுதிய சினிமா விமர்சகர்களும் உள்ளார்கள். இந்தப் படத்தின் முக்கியமான ப்ளஸ்ஸாக பார்க்கப்பட்டது யுவனின் இசை, ஹாலிவுட் ரேஞ்சில் இசையமைத்திருக்கிறார் என பலரும் பாராட்டினர்.

புதுப்பேட்டை திரைப்படக் காட்சித் தொகுப்பு

தனுஷ் திரையுலக பயணத்தில் இது மாபெரும் திருப்புமுனையாக அமைந்த படம். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தனுஷிடம், நீங்கள் இந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிப்பதுதான் வாழ்நாள் கனவு என்றால் எந்தக் கதாபாத்திரத்தை சொல்வீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. தனுஷ் சற்றும் யோசிக்கமால், அப்படி படம் எதுவும் இனி இல்லை, நான் ஏற்கனவே அதில் நடித்துவிட்டேன், அதுதான் புதுப்பேட்டை ‘கொக்கி குமார்’ என்றார். கொக்கி குமார் என்ற கதாபாத்திரமாக தனுஷ் வாழ்ந்திருப்பார். ஸ்கூல் பையன், போதை பொருள் விற்பவன், கேங்ஸ்டர், அரசியல்வாதி என தனுஷின் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு கதை விரியும். 13 ஆண்டுகள் கழித்தும் இந்தத் திரைப்படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடுவதற்கு தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

புதுப்பேட்டை

இது குறித்து அவர், மாஸ்டர் ஃபிலிம் மேக்கர் செல்வராகவனின் ‘புதுபேட்டை’ வெளியாகி 13 ஆண்டுகள் நிறைவடைகிறது. இப்படி ஒரு படத்தில் நடித்ததற்கு மிகவும் பெருமைப்படுகிறேன். இத்தனை ஆண்டுகள் கழித்தும் புதுப்பேட்டை படத்தையும், கொக்கி குமாரையும் கொண்டாடும் ரசிகர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Last Updated : May 27, 2019, 7:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details