பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் சில தினங்களுக்கு முன்பு மும்பை பாந்த்ராவில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்த தற்கொலைக்கு அவரது தனிப்பட்ட வாழ்வில் இருந்த பிரச்னைகள்தான் காரணம் என முதலில் கூறப்பட்டது.
ஆனால், பாலிவுட் திரையுலகில் பலர் அவரைப் புறக்கணித்ததால்தான், மன உளைச்சலுக்கு ஆளாகி அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் என வழக்கறிஞர் சுதிர்குமார் ஓஜா என்பவர் நீதிமன்றத்தில் தற்போது வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு குறித்து சுதிர்குமார் அளித்துள்ள புகார் மனுவில், ”சினிமா பிரபலங்கள் சிலர் கூட்டாக இணைந்து சுஷாந்த் சிங் ராஜ்புத்திற்கு பட வாய்ப்புகள் வராமல் தடுத்தும், அவரது படங்களை திட்டமிட்டு தோல்வியடையச் செய்யும் வேலைகளையும் செய்து அவருக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர்.
இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் தான் அவர் தற்கொலை முடிவுக்குத் தள்ளப்பட்டார். குறிப்பாக இந்த செயலில் நடிகர் சல்மான் கான், தயாரிப்பாளர்கள் கரண் ஜோஹர், ஏக்தா கபூர், சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்ட எட்டு பேர் திட்டமிட்டு சுஷாந்த் சிங்கின் பட வாய்ப்புகளைத் தடுத்துள்ளனர். அதனால்தான் சுஷாந்த் மன உளைச்சல் மிகுந்து தற்கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் கங்கனா ரனாவத் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்தார்.