இது வீடு திரும்பும் நேரம்... வெளிநாடுகளில் சிக்கிய இந்திய மாணவர்களை மீட்கும் சோனு சூட்!
மும்பை: ஊரடங்கு காலத்தில் குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிவந்த நடிகர் சோனு சூட், தற்போது வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்திய மாணவர்களை மீட்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளார்.
ஊரடங்கு காலத்தில் ரியல் ஹீரோவான சோனு சூட், குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவியது மூலம் திரைப் பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளார். குடிபெயர்ந்தோருக்கு உதவிய தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளும் விதமாக புத்தகம் ஒன்றை எழுதவிருப்பதாக, சோனு சூட் சமீபத்தில் அறிவித்திருந்தார். அதுமட்டுமில்லாது மருத்துவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள், காவலர்களுக்கு முகக் கவசங்கள் என தன்னால் இயன்ற உதவிகள் அனைத்தையும் அவர் செய்துவருகிறார்.
தற்போது வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இந்திய மாணவர்களை மீட்கும் முயற்சியில் சோனு சூட் இறங்கியுள்ளார். ரஷ்யாவின் கிர்கிஸ்தானில் சிக்கியிருக்கும் இந்திய மாணவர்கள் நாடு திரும்ப சோனு சூட் உதவியுள்ளார். இன்று (ஜூலை 22) தனி விமானம் மூலம் அந்த மாணவர்கள் இந்தியா திரும்புகின்றனர்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இது வீட்டுக்குத் திரும்புவதற்கான நேரம் என்று கிர்கிஸ்தானில் இருக்கும் மாணவரிடம் தெரிவித்துக்கொள்கிறேன். பிஷ்கெக்-வாரணாசி இடையே முதல் தனி விமானம் இன்று புறப்படுகிறது. இதுகுறித்த விவரங்கள் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும். மற்ற மாநிலங்களுக்கான தனி விமான சேவைகளும் இந்த வாரம் தொடங்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.