மும்பை: ஷாகித் கபூர் தனது நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெர்சி’ திரைப்படம் தீபாவளியையொட்டி நவம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு நானி நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த தெலுங்கு திரைப்படம் ‘ஜெர்சி’. உடல்நலக் கோளாறு காரணமாக கிரிக்கெட்டை கைவிட்ட இளைஞன், தனது 30 வயதில் மீண்டும் இந்திய அணிக்காக விளையாட முடிவு செய்கிறான். ஜெர்சி கேட்கும் தன் மகனுக்கு அவன் இந்திய அணியின் ஜெர்சியை பெற்றுத் தருவதே இதன் கதைச்சுருக்கம்.
இந்தப் படத்தின் ரீமேக்கில் ஷாகித் கபூர் நடித்துள்ளார். இது தீபாவளியையொட்டி நவம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ள ஷாகித், மனிதனின் ஆன்ம வலிமைக்கு கிடைக்கும் வெற்றியை இப்படம் பதிவு செய்கிறது. இந்தப் படத்தில் பணியாற்றியதை நான் பெருமையாக கருதுகிறேன். இது என் அணிக்காக என தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தெலுங்கில் ஜெர்சியை இயக்கிய கௌதம் தின்னனுரிதான் பாலிவுட்டிலும் இப்படத்தை இயக்கியுள்ளார். தீபாவளி நேரத்தில் இப்படத்தை வெளியிடுவதே சரியாக இருக்கும் என தயாரிப்பாளர் அமன் கில் தெரிவித்துள்ளார்.