தமிழில் முதல்முறையாக ’ஆடுகளம்’ படத்தில் களமிறங்குகிறார் தப்ஸி. இவருக்காகவே அத்திரைப்படத்தில் பாடல் ஒன்றும் இடம்பெற்றது. அப்பாடலே தமிழ் ரசிகர்களின் கவனத்தை அவர் பக்கம் ஈர்த்தது என்றே கூறலாம். தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் பதிந்து போனார் தப்ஸி. அதன் பிறகு தெலுங்கு, இந்தி எனத் தொடர்ந்து படங்களில் கமிட் ஆகி வந்த தப்ஸி, ’பிங்க்’ திரைப்படத்திற்குப் பிறகு அவரது முதிர்ந்த நடிப்புக்காக அதிக கவனம் பெறத் தொடங்கினார். இந்தத் திரைப்படம் தேசிய விருதையும் தட்டிச் சென்றது.
இதன் பிறகு நாம் ’ஷபானா’, ’த காசி அட்டாக்’ போன்ற திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியிருந்தார். இவரது கோர்ட்ரூம் ட்ராமா திரைப்படமான ’முல்க்’ (2018) திரைப்படம் விமர்சன ரீதியாக அதிக கவனம் பெற்றது. இத்திரைப்படம் இஸ்லாமியர்கள் பலரும் தீவிரவாதத்துடன் தொடர்புடையவர்கள், தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் என்ற பொதுபுத்தியை உடைத்தெரிந்தது.
அதனைத் தொடர்ந்து தப்ஸி பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைக்களத்தை தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்தார். 2019ஆம் ஆண்டு அமிதாப் பச்சனுடன் பத்லா, கேம் ஓவர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். அந்த ஆண்டில் சுதந்திர தினத்தன்று வெளியான ’மிஷன் மங்கல்’ திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் தப்ஸி நடித்தார்.
ஷார்ப்ஷூட்டர்கள் சந்திரோ, பிரகாஷி தோமரின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட ’சாந்த் கி ஆங்க்’ திரைப்படத்தில் தப்ஸி, பூமி பெத்னேகர் ஆகியோர் நடித்தனர்.