இயக்குநர் சைலேஷ் கோலானு இயக்கத்தில் தெலுங்கில் வெளியான காப் த்ரில்லர் படம் 'ஹிட்'. காணாமல் போன ஒரு பெண்ணை தேடி செல்லும் ஒரு காவல்துறை அதிகாரியின் கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் கூறும் படமாக இது அமைந்திருந்தது.
இந்தியில் ரீமேக் செய்யப்படும் தெலுங்கில் வெளியான 'ஹிட்' - ஹிந்தியில் ரீமேக் ஆகும் ஹிட்
மும்பை: தெலுங்கில் வெளியான காப் த்ரில்லர் 'ஹிட்' திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் நடிகர் ராஜ்குமார் ராவ் நடிக்க உள்ளார்.
தெலுங்கில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த இப்படம், தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இந்தி ரீமேக்கிலும் இப்படத்தை சைலேஷ் கோலானு இயக்குகிறார். முக்கியக் கதாபாத்திரமாக நடிகர் ராஜ்குமார் ராவ் நடிக்க உள்ளார். இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளரான 'தில்' ராஜு தயாரிக்கிறார்.
இதுகுறித்து ராஜ்குமார் ராவ் கூறியதாவது, நான் ஹிட் படத்தை பார்த்தபோதே படத்துடன் ஒன்றிணைந்து விட்டேன். இப்படத்தின் கதை இன்றையச் சூழலில் மிகவும் பொருத்தமான கதையாகும்.
அதுமட்டுமின்றி ஒரு நடிகராக இப்படத்தின் கதாபாத்திரம் என்னை புதிய பரிமாணத்தில் காட்டும் என நம்புகிறேன். அதுமட்டுமல்லாது நடிப்பில் புதியக் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுக்கும் ஒரு வாய்ப்பை இப்படம் கொடுத்துள்ளது.
சைலேஷ் கோலானு, 'தில்' ராஜூ உடன் இந்தப் படத்தில் பணியாற்ற நான் மிகவும் ஆவலுடன் இருக்கிறேன்" என்று கூறினார்
இப்படத்தின் இந்தி ரீமேக் குறித்து சைலேஷ் கோலானு கூறியிருப்பதாவது, ஹிட் படத்தின் கதாப்பாத்திரம் ஒரு சிக்கலானது. ஒரு காவல்துறை அதிகாரியின் கடந்தகால வாழ்வையும் நிகழ்கால வாழ்வையும் போராடி வரும் ஒரு கதாபாத்திரம். இந்த கதாபாத்திரத்தை நடிப்பில் மிகவும் அனுபவம் கொண்ட ஒருவரால்தான் பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யமாக காட்ட முடியும்.
ஹிந்தியில் ராஜ்குமார் ராவ் அதற்கு பொருத்தமாக இருப்பார் என எனக்கு தோன்றியுள்ளது. நான் அவரது ஒவ்வொரு படத்தையும் பார்த்துள்ளேன். அவர் ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்புத் திறமையால் நம்மை ஆச்சர்யப்பட வைத்துள்ளார்.
பாலிவுட்டில் ஹிட் திரைப்படம் நிச்சயம் வெற்றி பெறும் என நான் நம்புகிறேன். பாலிவுட் ரசிகர்களுக்கு ஏற்ப கதையில் சிறு மாற்றங்கள் செய்யப்படும். குற்றம், விசாரணை தற்போதைய உலகில் ஒரு யதார்த்தமான ஒன்றாகிவிட்டது என்று கூறினார்.
தெலுங்கில் வெளியான நானியின் ஜெர்சி திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் ஷாகித் கபூர் நடித்துவருகிறார். இந்த படத்தை தில் ராஜு தயாரித்து வருகிறார். இதனோடு சேர்ந்து ஹிட் படத்தின் இந்தி ரீமேக்கில் தில் ராஜு - குல்தீப் ரத்தோருடன் இணைந்து தயாரிக்க உள்ளார்.
இப்படத்தில் நடிக்கும் மற்ற கதாபாத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.