சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரசின் தாக்கம் பல நாடுகளை அச்சுறுத்திவருகிறது. அந்தவகையில் இந்தியாவுக்குள் புகுந்த இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.
இதிலிருந்து தப்பிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலியுறுத்தி அரசும் பிரபலங்களும் விழிப்புணர்வுகளை மக்களிடையே கூறிவருகின்றனர்.
அந்தவகையில் பாலிவுட், ஹாலிவுட் என கலக்கிவரும் பிரியங்கா சோப்ரா, கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள கைகூப்பி வணக்கம் செய்யுங்கள் எனக் கூறியுள்ளார். இது குறித்து தனது சமூக வலைதளப்பக்கமான ட்விட்டரில், அவர் வணக்கம் கூறும் புகைப்படங்களை வைத்து காணொலி ஒன்றை பதிவிட்டுள்ளார்.
உலக நாடுகள் அனைத்தும் தற்போது இந்தியாவின் பழைய முறையான வணக்கத்திற்கு மாறிவருகின்றனர். இது கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள புது வழி. எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள் எனப் பதிவிட்டுள்ளார். உலகத் தலைவர்கள் முதல் மக்கள் வரை தற்போது கைக்குலுக்குவதற்குப் பதிலாக வணக்கம் சொல்லிவருகின்றனர்.