அட்லி - ஷாருக்கான் கூட்டணியில் உருவாகவுள்ள படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெறி, மெர்சல், பிகில் என விஜய்யை வைத்து ஹாட்ரிக் வெற்றி தந்தவர் அட்லி. ‘பிகில்’ படத்தின் மூலம் ஷாருக்கானின் கவனத்தை பெற்றார். அவருடன் ஒரு படம் செய்யவும் ஒப்பந்தமானார். இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளது.
இந்தப் படத்தில் கதாநாயகியின் பங்களிப்பு முக்கியமானதாக இருப்பதால், நயன்தாராவை நடிக்க வைக்க அட்லி முடிவு செய்திருக்கிறார் என கூறப்படுகிறது. அட்லியின் ‘ராஜா ராணி’ திரைப்படம்தான் நயன்தாராவின் திரைப்பயணத்தை மாற்றியமைத்தது என கூறலாம். அதன்பிறகு கதாநாயகியை மையப்படுத்திய பல படங்களில் நடித்து, லேடி சூப்பர் ஸ்டாராக வளர்ந்து நிற்கிறார் நயன்தாரா.
கடைசியாக அட்லி இயக்கத்தில் உருவான ‘பிகில்’ படத்திலும் நயன்தாரா நடித்திருந்தார். ஆனால், அதில் அவரது கதாபாத்திரம் சொல்லிக் கொள்ளும் அளவு இல்லை. இதன் காரணமாக இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை அட்லி வழங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க:மீண்டும் தொடங்கிய பிரபாஸின் பிரமாண்ட படப்பிடிப்பு