இந்தியில் 'தபாங்', 'சிங் இஸ் கிங்', 'சிம்பா', தமிழில் 'குத்து', 'அருந்ததி', 'ஒஸ்தி' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளவர் பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட்.
கரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், மும்பையில் வேலைசெய்து வந்த குடிபெயர்ந்த தொழிலாளர்கள் பலர், வேலையிழந்து, உணவு உறைவிடமின்றி திண்டாடி வருகின்றனர். இவர்களைப் பார்த்து மனம் வருந்திய சோனு சூட், அண்டை மாநில அரசுகளுடன் பேசி தன் சொந்த செலவில் சிறப்புப் பேருந்துகள் மூலம் இவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்து வருகிறார்.
இதுகுறித்து சோனுசூட் கூறுகையில், "குடிபெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலத்திற்கு குடும்பத்தினருடன் நெடுஞ்சாலையில் நடந்து செல்வதைப் பார்த்து, நான் ஏசி அறையில் அமர்ந்து ட்வீட் செய்ய முடியாது. இவர்களுக்கு உதவுவது தான் எனது முக்கியக் கடமை.
இப்போது எனக்குத் தினமும் பல பேர்களிடம் இருந்து உதவி செய்யுமாறு கோரிக்கை வருகிறது. ஊரடங்கில் எனது முழு வேலையே இவர்களுக்கு உதவுவது மட்டுமே. தொழிலாளர்கள் துன்பங்களைப் பார்க்கும்போது என்னால் இரவில் உறங்க முடியவில்லை. இதைப் பார்க்கும்போது நமக்குள் இருக்கும் மனிதத் தன்மையை இழந்து விடுவோமோ என்ற எண்ணம் ஏற்படுகிறது.