டெல்லி: கிளாப் போர்டுடன் கியாரா அத்வானியும் பின்னணியில் கார்த்திக் ஆர்யனும் நிற்க திகில் படமான 'பூல் புலையா 2' ஷுட்டிங் தொடங்கியுள்ளது.
மலையாள 'மணிசித்திரத்தாலு', கன்னடத்தில் 'ஆப்தமித்ரா' என்ற பெயரில் வெளியாகி சூப்பர் ஹிட்டான நிலையில், தமிழில் 'சந்திரமுகி'யாக வெளிவந்து ரசிகர்களை மிரட்டியது.
இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தமிழைத் தொடர்ந்து பாலிவுட்டில் அக்ஷய் குமார், வித்யா பாலன் நடிப்பில் 'பூல் புலையா' என்ற பெயரில் வெளிவந்தது. இப்படத்தை மலையாள இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கியிருந்தார்.
மற்ற மொழிகளைப் போல பாலிவுட்டில் படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. இதைத்தொடர்ந்து இந்தப் படத்தின் அடுத்த பாகமாக 'பூல் புலையா 2' குறித்து கடந்த சில வாரங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தற்போது படத்தின் ஷுட்டின் தொடங்கியுள்ளது. 'பூல் புலையா' இரண்டாம் பாகத்தில் கார்த்திக் ஆர்யன் கதாநாயகனாகவும் கியாரா அத்வானி கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள்.
இந்த நிலையில், 'பூல் புலையா' முதல் பாகத்தில் வந்த அரண்மனை போன்ற செட்டில் கூர்மையான பார்வையுடன் கார்த்திக் நிற்க, அவருக்கு முன்னால் கிளாப் போர்டுடன் கியாரா அத்வானி சிரித்தவாறு நின்றுகொண்டிருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, படத்தின் ஷுட்டிங் தொடங்கியதாக தெரிவித்துள்ளார் கார்த்திக் ஆர்யன்.
இந்தப் படத்தை அனீல் பாஸ்மி இயக்குகிறார். வரும் 2020 ஜூலை 31இல் படத்தை வெளியிட படக்குழுவினர்கள் திட்டமிட்டுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக கோலிவுட்டில் ஏகப்பட்ட திகில் படங்கள் வெளியாகி ரசிகர்களை பயமுறுத்தி வந்தன. இதையடுத்து தற்போது பாலிவுட்டில் அந்தக் காத்து லக்ஷ்மி பாம், பூல் புலையா மூலம் வீசத் தொடங்கியுள்ளது.