நசிருதீன் ஷாவிடம் திட்டு வாங்குவது கடவுளிடம் ஆசிர்வாதம் பெறுவதற்கு சமம் - கங்கனா ரனாவத் - சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம்
மும்பை : பாலிவுட்டில் நிலவும் வாரிசு அரசியல் குறித்து கங்கனா தெரிவிக்கும் கருத்திற்கு நடிகர் நசிருதீன் ஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்குப்பின் சமூக வலைத்தளத்தில் வாரிசு அரசியல் தொடர்பான சர்ச்சை வெடித்துள்ளது. இதனால் நெட்டிசன்கள் பலரும் வாரிசு நடிகர்களை அவர்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் சென்று திட்டித் தீர்த்து வருகின்றனர்.
தற்போது சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில் பிரபல மூத்த பாலிவுட் நடிகர்களில் ஒருவரான நசிருதீன் ஷா சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் நடிகை கங்கனாவின் பெயரைக் குறிப்பிடாமல் அவரது செயலைக் கடுமையாக விமர்சித்திருந்தார்.
அதில், ”வெளியிலிருந்து வருபவர்கள், வாரிசு என்று இவர்கள் அடையாளப்படுத்தும் முட்டாள்தனம் எனக்குப் புரியவில்லை. இது வெறும் அபத்தம். இதற்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஒரு நடிகனாக என் வாழ்க்கையில் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் வாழும் நான், ஏன் என் மகனை அதே துறைக்குக் கூட்டி வர ஏன் ஊக்குவிக்கக் கூடாது? இதேதான் ஒரு தொழிலதிபரும் வழக்கறிஞரும் மருத்துவரும் செய்வார். எவரும் செய்யக்கூடிய ஒன்றே இது.
இந்த வாரிசு என்ற அடையாளம் ஒரு கட்டம் வரை மட்டுமே அழைத்துச் செல்லும். அதற்குமேல் அவர்கள் திறமைதான் அவர்களைக் காப்பாற்றும். துறை மீது சிறிய விரக்தியில் இருக்கும் ஒவ்வொருவரும் சுஷாந்தை வைத்து ஊடகங்களில் பேசி வருகின்றனர்.
சுஷாந்துக்கு நீதி தேடித் தரவேண்டும் என்று அரைகுறை கல்வி அறிவுள்ள ஒரு நடிகை, தானே முன்வந்து போராடுகிறார். உங்கள் புகார்களை உங்களுடனே வைத்துக் கொள்ளுங்கள். சட்டத்தின் மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். அது தன் கடமையை செய்யும்” என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், ”அரைகுறை கல்வி அறிவுள்ள ஒரு நடிகை” என்று நசிருதீன் ஷா விமர்சித்திருந்தது நடிகை கங்கனா ரனாவத்தை தான் என சமூக வலைதள வாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில் நடிகை கங்கனா ரனாவத் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், " உங்கள் கருத்துக்கு நன்றி நசிருதீன் சார். என் சமகால நடிகைகள் யாரும் பெறாத எனது விருதுகள், சாதனைகளை நீங்கள் வாரிசு அரசியல் என்ற தராசில் எடை போட்டிருக்கிறார்கள். எனக்கு இது பழகிவிட்டது. ஆனால் இதையே நான் பிரகாஷ் படுகோன் அல்லது அனில் கபூரின் மகளாக இருந்தால் சொல்லி இருப்பீர்களா?