பாலிவுட் சினிமாவில் மாற்று சினிமாக்களை உருவாக்க நினைத்து கல்ட் இயக்குநர் என்ற பெயரை பெற்றவர் அனுராக் காஷ்யப். தனக்கென்று ஒரு தனிப்பாணியை உருவாக்கி சர்வதேச அரங்கில் சிறந்த இயக்குநராகவும் வலம்வருகிறார். கடந்த வருடம் அதர்வா, நயன்தாரா, நடிப்பில் வெளிவந்த இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் அனுராக் காஷ்யப் வில்லனாக அறிமுகமாகி மிரட்டியிருந்தார். சிறந்த இயக்குநர் என பெயர் பெற்ற இவர் நடிப்பிலும் தனி முத்திரை பதித்தார்.
'இது பாஜக குண்டர்களின் வேலை' - அனுராக் காஷ்யப்
பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் 'இது குண்டர்களின் வேலை... சவுகிதார்கள் செய்யும் வேலை இல்லை' என பாஜகவை விமர்சித்து ட்வீட் செய்துள்ளார்.
மேலும், சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அனுராக் காஷ்யப், சமீபத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தை வியந்து பாராட்டியிருந்தார். இந்நிலையில், ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி ஒன்றை வெளியிட்டது. அதில், 'பாஜக கட்சியைச் சார்ந்த ரமேஷ் கத்தாரா என்பவர், குஜராத் மாநிலம் ஃபேத்புரா தொகுதியில் போட்டியிடுகிறார். அவர், நீங்கள் பாஜகவிற்கு வாக்களிக்காமல் காங்கிரசுக்கு வாக்களித்தால் ஆதார் கார்டு, கைரேகை மற்றும் உங்களது புகைப்படம் அனைத்தும் தெரிந்துவிடும். வாக்கு எண்ணிக்கை குறைந்தால், வாக்களிக்காமல் ஏமாற்றினாலும் எங்களிடம் தப்பிக்க முடியாது. வாக்களிக்காத நபருக்கு வேலை கிடைக்காமல் போய்விடும்' என தெரிவித்திருந்தது.
இதனைக் குறிப்பிட்டு 'இது நேரடியாக விடுக்கும் மிரட்டல்... கொடுமைப்படுத்துதல்... இது குண்டர்களின் வேலை... சவுகிதார்கள் செய்யும் வேலை இல்லை...' என ட்வீட் செய்துள்ளார். தற்போது இந்த சம்பவம் விவாதப் பொருளாக மாறியுள்ளது. பலரும் பாஜகவிற்கு எதிராக தங்களது கண்டனங்களை பதிவு செய்துவருகின்றனர்.