திராவக வீச்சால் பாதிக்கப்பட்ட லக்ஷ்மி என்ற பெண்ணின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள சப்பாக் திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், புதுச்சேரி, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் அரசுகள் இப்படத்திற்கு வரி விலக்கு அளித்துள்ளன.
இது குறித்து மத்தியப் பிரதேச முதலமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தத் திரைப்படம் திராவக வீச்சால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று மீண்டோரை ஊக்குவிக்கும்விதத்திலும், அவர்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கும்வகையிலும் உள்ளது. திராவக வீச்சால் பாதிக்கப்பட்டு மீண்டோரின் துணிவு, போராட்டம், வாழ்வின் மீது அவர்கள் கொண்டுள்ள பற்று, சமூகத்திற்கு பங்காற்ற முனையும் அவர்களது மனோதிடம், குறிக்கோள்களைப் பற்றி பேசுகிறது" எனப் பாராட்டியுள்ளார்.
சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல், பெண்களின் மீது கட்டவிழ்க்கப்படும் கொடூர வன்முறையான திராவக வீச்சு தாக்குதலைப் பற்றி பேசி இத்திரைப்படம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது என்றார். இத்திரைப்படத்தை மக்கள் குடும்பத்துடன் திரையரங்குகளில் கண்டு விழிப்புணர்வு பெற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.