நடிகர் விஜய் சேதுபதி தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழி திரைத்துறைகளிலும் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி தற்போது இந்தியில் சந்தோஷ் சிவன் இயக்கும் 'மும்பைகர்' என்னும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் அவர் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். தமிழில் வெளியான 'மாநகரம்' படத்தின் அதிகாரப்பூரவ ரீமேக்கே 'மும்பைகர்'.
இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி 'அந்தாதுன்' பட இயக்குநர் ஸ்ரீராம் இயக்கும் படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படத்தில் கத்ரீனா கைஃப் முக்கியக் கதபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் நடிக்கவுள்ள இந்தப் படத்திற்கு 'மேரி கிறிஸ்துமஸ்' (Merry Christmas) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு மே 15ஆம் தேதி தொடங்கும் எனப் படக்குழு தெரிவித்திருந்தது. ஆனால் அதற்குள் நடிகை கத்ரீனா கைஃபுக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனது. இந்நிலையில் தற்போது அதிக கரோனா தொற்றுப் பரவல் காரணமாக பொதுமுடக்கத்தை மகாராஷ்டிரா அரசு நீட்டித்துள்ளதை அடுத்து, 'மேரி கிறிஸ்துமஸ்' படத்தின் படப்பிடிப்பு காலவரையின்றி தள்ளிவைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
'மேரி கிறிஸ்துமஸ்' படம் குறித்து படத்தின் தயாரிப்பாளர் ரமேஷ் தவூராணி கூறுகையில், ”மேரி கிறிஸ்துமஸ் படத்தின் படப்பிடிப்பை நாங்கள் ஜூன் மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளோம். பொதுமுடக்கம் முடிந்த பின்னரே படப்பிடிப்பு தொடங்கும். ஆகவே படப்பிடிப்பு தொடங்குவதற்கான தேதியை இப்போது கூற முடியாது.
இந்தியாவில் பல மாநிலங்களில் பொதுமுடக்கம் அமலில் இருப்பதால் படப்பிடிப்பை வேறு எங்கும் நடத்த முடியவில்லை. எனவே நாங்கள் மறுபடியும் நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்களின் கால்ஷீட்டை மாற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது. இதுகுறித்து வரும் நாள்களில் அறிவிப்போம்" என்றார்.