தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

‘ஆர்ட்டிகள் 15’  - சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்? - caste discrimination

பிரபல பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளியாகி, பொது சமூகத்தின் புற்றுநோயாக இருக்கும் சாதிய படிநிலைகளால் இழைக்கப்படும் அநீதிகள் குறித்த விவாதத்தை தொடக்கியுள்ளது. வடக்கில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ என கொண்டாடப்படும் இப்படத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது? காண்போம்...

ஆர்ட்டிகள் 15  - சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்?

By

Published : Jul 7, 2019, 3:14 PM IST

உத்தரப் பிரதேசத்தில் ஒரு கிராமம், அங்குள்ள ஒரு மரத்தில‌் தூக்கில் தொங்கும் இரண்டு தலித் பெண்களின் சடலங்கள், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஃபாரின் ரிட்டன் ஐபிஎஸ் அதிகாரி, அந்த இரு பெண்கள் இறந்தது எப்படி, காணாமல் போன மற்றொரு பெண்ணின் நிலை என்ன? இதுதான் இத்திரைப்படத்தின் கதைக்களம். இதில் இந்திய சமூகத்தில் இருக்கும் சாதிய குரூரங்களை மிக அழகாக எடுத்துரைத்திருக்கிறார் ‘ஆர்ட்டிகள் 15’ படத்தின் இயக்குநர் அனுபவ் சின்ஹா.

திரையரங்கினுள் சென்று நமது ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டு அமர்ந்ததும், நம்மை டைட்டில் கார்டிலேயே முதலில் வரவேற்கிறார் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத். கதைக்களம் உத்தரப் பிரதேசத்தில் நடப்பதால் அவருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றபடி கதைக்கும் அதில் கூறப்பட்டுள்ள அரசியலுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. இதை நாங்கள் நம்பினோம். நீங்களும் நம்புவோமாக.

காணாமல் போன பெண்ணைத் தேடிச் செல்லும் ஆயுஷ்மான் குர்ரானா

பொதுவாக நாம் பேருந்தில் சென்று கொண்டிருக்கும்போது தெரியாமல் சில்லறையைக் கீழே தவற விட்டிருப்போம், அல்லது நடத்துநரிடம் இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் வரை வாங்காமல் விட்டிருப்போம். நம் வாழ்வில் மிகச் சாதாரணமாக நடக்கும் சம்பவம் இது. ஆனால், உத்தரப் பிரதேசத்தில் இருக்கும் தலித் சிறுமிகள் வெறும் மூன்று ரூபாய், ஆம்... வெறும் மூன்று ரூபாய் சம்பள உயர்வு கேட்டதன் காரணமாகக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். அது மட்டுமின்றி மற்ற தலித் சிறுமிகள் இதுபோன்ற சம்பள உயர்வு கேட்கக்கூடாது என்பதற்காக, அந்த இரு சிறுமிகளின் சடலங்களை அங்குள்ள கிராமத்தில் உள்ள ஆல மரத்தில் தொங்கவிட்டுச் செல்கின்றனர். இதன் விசாரணையே ஆர்ட்டிகள் 15 திரைப்படம்.

கொலை செய்து துக்கலிடபட்ட தலித் சிறுமிகள்

"ஒரு மனிதனுக்கான எந்தவித அடிப்படை உரிமைகளும் சாதி, மதம், இனம், பால், பிறப்பிடம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் மறுக்கப்படக்கூடாது" என்பது தான்இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஆர்ட்டிகள் 15 எடுத்துரைப்பது. ஆனால், கடைக்கோடியில் உள்ள இந்தியனுக்கும் தெரியும், இது தெர்மாகோலைக்கொண்டு ஏரியை மூடும் அறிவுப்பூர்வமான ஐடியாவிற்கு சமம் என்று. அதற்கான எடுத்துக்காட்டுகள் நிகழ்காலத்திலேயே ஆயிரம் உண்டு. இங்கு நீங்கள் ஹைகோர்ட் ஆவது ***ராவது என்று கேட்கலாம், பத்திரிகையாளர்களை மிகவும் இழிவாக விமர்சிக்கலாம்; நீதிமன்றம் உங்களை எதுவும் சொல்லாது‌. ஆனால், என்றோ மறைந்த ராஜ ராஜ சோழனைப் பற்றி ஒரு சிறு விமர்சனம் செய்தால் கூட ஆண்டி இந்தியன் என்றோ "கருத்துச் சுதந்திரத்துக்கு ஒரு எல்லை இல்லையா" என்ற கேள்வியையோ நீங்கள் எதிர்கொள்ள நேரும். ஏனென்றால், அதுதான் இங்கு இந்திய சமூகத்தில் உள்ள எதார்த்தம். இந்த எதார்த்தத்தை அப்படியே பதிவு செய்ததால் தான் இப்படம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

தலித்துகள் மீது தாக்குதல் நடத்தும் ஆதிக்க சாதியினர்

ஆரம்பத்தில் வழக்கை விசாரிக்கும், காவல்துறை அதிகாரிகள் அந்தப் பெண்கள் இருவரும் ஓரின சேர்க்கையாளர்கள் என்றும், அதை கண்டுபிடித்த அவர்களது தந்தைகளே அவர்களை ஆணவக் கொலை செய்ததாகவும் வழக்கை முடிக்கின்றனர். வழக்கு தவறாக கையாளப்படுவதைக் கண்டித்து அங்குள்ள தலித்துகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். அதன் காரணமாக காவல் துறை அலுவலகத்தில் சாக்கடை நீர் அடைப்பைச் சரிசெய்ய முடியாமல் அந்த இடமே நாசமாகிறது. வழக்கை விசாரிக்கும் ஐபிஎஸ் அதிகாரி விசாரணை நேர்மையாகச் செல்லும் என உறுதி அளித்ததையடுத்து வேலைநிறுத்தம் விலக்கிக்கொள்ளப்படுகிறது. படத்தின் அடுத்த காட்சியே தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் அந்த சாக்கடைக்குள் சென்று சுத்தம் செய்கிறார். பின்னணியில் ஒலிக்கிறது பாரதமாதாவின் வந்தே மாதரம்.

தலித் கிரமத்தில் போச்சுவார்த்தையில் ஈடுபடும் கதாநாயகன் ஆயுஷ்மான் குர்ரானா.

படத்தைப் பார்த்த பலர் இதில் காட்டமாக ஒரு விமர்சனத்தை முன்வைக்கின்றனர். பாரதிராஜாவின் ‘வேதம் புதிது’ படத்திலும் முன்வைக்கப்பட்ட அதே விமர்சனம். தலித்துக்களுக்கு ஒரு பிரச்னை என்றால் கூட ஏன் பிராமின் காவல் அதிகாரி தான் தீர்வு காண வேண்டுமா? என்பது. ஆம் அது தான் இங்கு நிதர்சனம். ஏனெனில் நாட்டின் முதல் குடிமகனுக்கே கோவிலின் நுழைவு மறுக்கப்பட்டதாக வெளியான செய்திகளை இங்கு நாம் நினைவு கூற வேண்டும். சாதி ஒழிப்பு என்பது நாலு ஷங்கர் படத்தைப் பார்த்துவிட்டு சாதி சான்றிதழ்களைக் கிழித்துப் போடுவதால் மட்டும் வந்துவிடாது. அம்பேத்கர் சொன்னதைப் போல, சாதி என்பது ஒரு செங்கல் சுவரோ, முள் வேலியோ அல்ல. அது மூளையிலுள்ள ஒரு பொய்யான உணர்வு, அதை நாம் தூக்கி எறிய வேண்டும்.

திரைப்படத்தில் வரும் அம்பேத்கர் சிலை

இத்திரைப்படத்தில் நிகழ்காலத்தைப் பிரதிபலிக்கும் பல அற்புதக் காட்சிகள் குறிப்பாகப் படத்தின் இறுதிக் கட்டத்தில் குற்றவாளிகளை காப்பற்ற முயலும் காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் போது, அங்கு இருக்கும் தலித் காவல்துறை அதிகாரியைப் பார்த்து, 'நீயெல்லம் கடைசி வரைக்கும் கூட்டி பெருக்கிட்டே இருந்துருக்கனும். உன்னையெல்லாம் எங்களோட சேர விட்டோம் பாரு’ என்று கூறி முடிப்பதற்குள் பளார் என்று விழுகிறது கன்னத்தில் அடி, அப்போது நம் கண்முன் வந்து செல்கிறது ஈரோட்டுக் கிழவன் பெரியார் சொன்ன "சூத்திரன் என்று சொன்னால் ஆத்திரம் கொண்டு அடி" என்ற வாசகம்.

படத்தில் வரும் ஒரு அட்டகாசமான காட்சி

சாதி என்ற குரூரம் நம் சமூகத்தில் குறிப்பாக வட இந்தியாவில் எப்படி செயல்படுகிறது என்பதை எவ்வித சமரசமுமின்றி படம்பிடித்துக் காட்டும் ஆர்ட்டிகள் 15 திரைப்படம் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டிய ஒரு படைப்பு என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

ABOUT THE AUTHOR

...view details