இந்தியாவில் தற்போது கரோனா வைரசின் (தீநுண்மி) இரண்டாவது அலை வேகமாகப் பரவிவருகிறது. கடந்த சில மாதங்களாகக் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்திருந்த நிலையில், கடந்த சில நாள்களாகத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
இந்நிலையில், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், தனக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பதாக தனது ட்விட்டர் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அக்ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், "எனக்கு கோவிட்-19 நேர்மறை என்று இன்று (ஏப்ரல் 4) காலை தெரியவந்தது. இதனையடுத்து கரோனா விதிகளைப் பின்பற்றி உடனடியாக நான் தனிமைப்படுத்திக்கொண்டேன்.
தற்போது வீட்டுத்தனிமையில் இருக்கும் நான் உரிய மருத்துவ உதவிகளை நாடியுள்ளேன். சமீபத்தில் என்னைச் சந்தித்தவர்கள் கரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். விரைவில் குணமாகிவருவேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
அக்ஷய் குமாரின் இந்த ட்வீட்டை பார்த்த பிரபலங்களும் ரசிகர்களும் விரைவில் குணமடைய வேண்டி வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். முன்னதாக பாலிவுட்டில் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஆலியா பட் உள்ளிட்ட பிரபலங்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.