பாலிவுட் நடிகர்கள் அக்ஷய் குமார், அஜய் தேவ்கன், ரன்வீர் சிங் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சூர்யவன்ஷி'. திரில்லர் காப் ஸ்டோரியாக உருவாகியுள்ள இப்படத்தை ரோகித் ஷெட்டி இயக்கியுள்ளார்.
மார்ச் 27ஆம் தேதி வெளியாகும் இப்படத்தை தர்மா புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் கத்ரீனா கைஃப், ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதனையடுத்து அக்ஷய் குமார் பத்திரிகையாளர்களை சமீபத்தில் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "நான் எந்த மதத்தையும் சார்ந்தவன் அல்ல. இங்கு ஒரு மதம் மட்டுமே உள்ளது; அது இந்தியன். 'சூர்யவன்ஷி' திரைப்படத்தில் இஸ்லாமியர்களைத் தவறாகச் சித்திரிப்பதாகக் கூறுகின்றனர். தயவு செய்து படத்தை மதத்தின் கண்ணோட்டத்தில் பார்க்காதீர்கள்.
நான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் கதாபாத்திரமும் வெவ்வேறாக வடிவமைக்கப்பட்டிருக்கும். எனது படத்தில் நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும். அதிலிருந்து ரசிகர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்கள் புத்திசாலிகள்.
ரோஹித் எனக்கு 28 வருடங்களாகத் தெரியும். உதவி இயக்குநராக இருந்ததில் இருந்து தற்போது வரை என்னுடன் நன்றாகப் பழகிவருகிறார். அவர் படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாகவும் வேடிக்கையாகவும் இருக்கும். இப்படத்தை நாங்கள் 55இல் இருந்து 60 நாள்களுக்குள் படப்பிடிப்பை நடத்தி முடித்தோம்" என்றார்.
தற்போது நாட்டில் கலவர பதற்றம் இருக்கும் சூழலில் இப்படம் திரைக்கு வருகிறது என்று செய்தியாளர்கள் கேட்கப்பட்டபோது, இது ஒரு தற்செயலான நிகழ்வு. நாங்கள் வேண்டுமென்ற இப்போது வெளியிடவில்லை. படத்தைப் பாருங்கள் பின் புரியும் என்றார்.