நடிகர் அமிதாப் பச்சன் உடல் நலக் குறைவு காரணமாக மும்பையிலுள்ள நானாவதி மருத்துவமனையில் நேற்று (ஜூலை 11) அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதேபோல், அவரின் மகனும் பாலிவுட் நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இது குறித்து அபிஷேக் பச்சன் ட்விட்டர் பதிவில், 'எனக்கும், என் தந்தைக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகளுடன் மருத்துவமனையில் நாங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளோம். அனைவரும் பதற்றமடையாமல் அமைதி காக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்' எனப் பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து இவர்கள் இருவரும் கரோனா தொற்றிலிருந்து மீண்டு வர பிரார்த்தனை செய்வதாக ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் ட்வீட் செய்திருந்தனர்.
இந்நிலையில், அமிதாப்பிற்கும், அபிஷேக்கிற்கும் கரோனா உறுதி செய்யப்பட்டதால், அவரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வீட்டில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கான முடிவுகள் இன்று (ஜூலை 12) வெளியானது. அதில், நடிகை ஜஸ்வர்யா ராய், அவரது மகள் ஆராத்யா மற்றும் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன் ஆகிய மூன்று பேருக்கும் கரோனா தொற்று நெகட்டிவ் என்று பரிசோதனை முடிவுகள் வந்துள்ளன.
அதேபோல், அமிதாப் வீட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் கரோனா இல்லை என்று சோதனை முடிவுகள் வந்துள்ளன. இருப்பினும், அடுத்ததாக ஸ்வாப் பரிசோதனை முடிவுகள் வெளிவந்த பின்னரே, இவர்கள் அனைவருக்கும் கரோனா தொற்று இல்லை என்று உறுதியாகச் சொல்ல முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:அமிதாப் பச்சனுக்கு கரோனா, மருத்துவமனையில் அனுமதி