'பாஸிகர் ஓ பாஸிகர் து ஹே படா ஜாதுகர்... ' 90 களின் தூர்தர்ஷன் காலத்தில் பரவலாக ஒலித்த இந்தப் பாடலையும், இளம் வயது ஷாருக்கானுடன் துள்ளிக் குதித்து கியூட்டாக ஆடும் கஜோலையும் அவ்வளவு எளிதாக யாராலும் மறந்துவிட முடியாது!
காந்தக் கண்ணழகி
சினிமா பின்னணியில் இருந்து வந்தவர் என்றாலும் கஜோல் தன் துறுதுறு நடிப்பாலும், பேசும் கண்களாலும் பாலிவுட் தாண்டி நாடு முழுவதும் கவனம் ஈர்த்தார்.
ஷாருக் - கஜோல் ஜோடி
'பாசிகர்' படத்தின் மூலம் ஷாருக்கானுடன் இணைந்து முதல் பிளாக் பாஸ்டர் வெற்றியை பதிவு செய்தார் கஜோல். தொடர்ந்து, மராத்தி மந்திரில் ஆண்டுக்கணக்காய் ஒளிபரப்பப்பட்டு குடும்பங்களால் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வரும் காதல் கதையான 'தில்வாலே துல்ஹனியா லே ஜாயிங்கே' படத்தை இதே ஜோடி கொடுத்தது.
அப்படத்தில் கஜோல் ஏற்று நடித்த சிம்ரன் கதாபாத்திரமும், வசனங்களும் இன்றும் இணையத்தையும் மீம்ஸ்களையும் ஆக்கிரமித்துள்ளன
'குச் குச் ஹோதா ஹே', 'கபி குஷி கபி கம்' என தொடர்ந்து ஷாருக்கான் - கரண் ஜோஹர் - கஜோல் கூட்டணியில் அமைந்த வெற்றிப் படங்கள் இன்றைக்கும் என்றைக்குமான பீல் குட் படங்கள்.
'மின்சாரக் கனவு' கஜோல்
பாலிவுட்டிலிருந்து கஜோலைஅப்படியே கடத்தி வந்து 'மின்சாரக் கனவு' படம் மூலம் தமிழில் அறிமுகப்படுத்தினார் ராஜீவ் மேனன். 'வெண்ணிலவே வெண்ணிலவே', 'தங்கத் தாமரை மகளே' பாடல்களின் இசையை காதுகள் ரசித்தாலும், கண்கள் கஜோலை தான் என்றும் காண விரும்பும்.