மும்பை காவல் துறையினர், மகாராஷ்டிர மாநிலம், சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரம், இந்தியத் திரையுலகம் ஆகியவை குறித்து தொடர்ச்சியாக சர்ச்சைக் கருத்துக்களை பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பகிர்ந்து வரும் நிலையில், அவர் மீது மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.
கங்கனா குறித்து புகார் அளித்துள்ள சந்தோஷ் தேஷ்பாண்டே எனும் இந்த சமூக ஆர்வலர், மகாரஷ்டிராவின் பெருமைக்கும் மரியாதைக்கும் ஊறு விளைவிக்கும் வகையில் கங்கனா கருத்துக்களைத் தெரிவித்து வருவதாகவும், கங்கனாவின் எரிச்சலூட்டும்படியான கருத்துக்கள், அம்மாநிலத்தில் பல பகுதிகளிலும் போராட்டங்களுக்கு வழிவகுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், மும்பை காவல்துறை தனது புகாரை ஏற்கத் தவறினால், தனது வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தை நாடி, தர்க்க ரீதியான முடிவை எட்டும்வரை தான் போராட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கங்கனா பகிரும் ட்வீட்களை கடுமையாக சாடியுள்ள அவர், கங்கனா தனது பேச்சு, கருத்து சுதந்திரங்களை தவறாகப் பயன்படுத்தி சமூக வலைதளத்தில் நஞ்சைப் பரப்பி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மும்பை காவல் துறையினரையும், மகாராஷ்டிர மாநிலத்தையும் இழிவுபடுத்தும்விதமாக கங்கனா கருத்து தெரிவித்ததாக நேற்று (செப்.04) அவருக்கு எதிராக பெரும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், இன்று (செப்.05) அவர் மீது இந்தப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.