வானியல் ஆய்வுகள் மறுமலர்ச்சி
இத்தாலிய வானியல் மேதையான கலீலியோ கலிலி 1610ஆம் ஆண்டு, தான் உருவாக்கிய தொலைநோக்கி மூலம் வியாழனின் நான்கு துணைக்கோள்களான அயோ, யூரோப்பா, கேன்மீட் மற்றும் காலிஸ்டோவை கண்டறிந்தார். அந்த கண்டுபிடிப்புக்குப் பின் வானியல் ஆய்வுகள் மறுமலர்ச்சிக்குக் காரணமாக அமைந்தன.
பேரிணைவு (கிரேட் கன்ஜங்க்ஷன்)
1623ஆம் ஆண்டு, சூரிய மண்டலத்தின் இரண்டு மிகப் பெரிய கோள்களான வியாழன், சனி இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்திருப்பதுபோல பயணித்தன. அதற்கு வானியலாளர்கள் பேரிணைவு (கிரேட் கன்ஜங்க்ஷன்) என பெயரிட்டனர். அதாவது சூரியக் குடும்பத்தில் அனைத்துக் கோள்களும் அதனுடைய சுற்றுப்பாதையில் சூரியனை சுற்றி வருகின்றன.
அப்படி சுற்றிவரும், ஒவ்வொரு கோளும் நெருக்கமாகபயணிக்கின்றன. இதனை பூமியிலிருந்து பார்க்கும்போது ஒன்றோடு ஒன்று இணைவது போல தோன்றும். அதனடிப்படையில், சூரியனை சுற்றிவர 11.86 ஆண்டுகளை எடுத்துக்கொள்ளும் வியாழனும், 29.4 ஆண்டுகளை எடுத்துக்கொள்ளும் சனியும் நெருக்கமாக சென்ற நிகழ்வு பேரிணைவு (கிரேட் கன்ஜங்க்ஷன்) என அழைக்கப்படுகிறது.
800 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பேரிணைவு
இப்படி மாறுபட்ட சுற்றுப்பாதை மற்றும் கால அளவில் சுற்றும் இரண்டு கோள்களும் நாளை (டிச.21) 800 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்திருப்பதுபோல தோன்றப்போகின்றன.
இதுதொடர்பாக நாசாவின் வானியலாளர் ஹென்றி த்ரூப், "இந்த கிரேட் கன்ஜங்க்ஷன் நிகழ்வின்போது அவற்றின் சுற்றுப்பாதையின் அடிப்படையில் வியாழன் கோள் உள் பாதையிலும், சனி கோள் வெளிப்பாதையிலும் செல்லவிருக்கின்றன. அதன்படி பூமியிலிருந்து நமக்கு சனி கோள் முன்பும், வியாழன் பின்பும் தெரியும். சனி கோளைவிட வியாழன் இரண்டு மடங்கு பெரியது என்பதால், வியாழனின் வெளிவட்டமும் சனி கோளின் சுற்றுப்புறத்தில் தெரிய வாய்ப்புள்ளது" என தெரிவித்தார்.
எப்போது நிகழும், வெறும் கண்களால் பார்க்கலாமா?
இந்த நிகழ்வு நாளை மாலை சூரியன் மறையும் நேரத்தில் 6.30 மணி முதல் சுமார் ஒரு மணி நேரம்வரை நிகழும். இந்த கிரேட் கன்ஜங்க்ஷனை மக்கள் உயரமான இடங்களில் வெறும் கண்களால் பார்க்கலாம். நிலவுக்கு அருகில் தோன்றும். இரண்டு கோள்களும் பூமியிலிருந்து பார்க்க ஒன்றோடு ஒன்று இணைந்திருப்பது போல தோன்றினாலும் இரண்டும் மோதிகொள்ளாது.
ஏனென்றால் இரண்டு கோள்களுக்கும் இடையில், சுமார் 600 மில்லியன் கி.மீ தொலைவு உள்ளது. இரண்டு கோள்களும் நெருங்கும்போது, 0.1 டிகிரியில் இணைந்திருப்பதுபோல தோன்றும். இதற்குப் பின் இந்த அரிய நிகழ்வு 2080ஆம் ஆண்டு நிகழவுள்ளது.
இதையும் படிங்க:கிரகணத்தை பாதுகாப்பாய் பார்ப்போம்!